செல்வமகள் திட்டம்; மாநிலத்தில் திருப்பூர் 2ம் இடம்
திருப்பூர்; கடந்த நிதியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த, 126 தபால் அலுவலர்களுக்கு விருது வழங்கும் விழா கடந்த, 10ம் தேதி சென்னையில் நடந்தது.இவ்விழாவில் தமிழக தபால்துறை தலைவர் மரியம்மா தாமஸிடம், திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன், கடந்த நிதியாண்டில், 10,529 செல்வமகள் சேமிப்பு கணக்கு துவங்கியதற்கு விருது பெற்றார். செல்வமகள் சேமிப்பு கணக்கு துவங்குவதில், மாநிலத்தில் இரண்டாமிடத்தை திருப்பூர் தபால் கோட்டம் பெற்றுள்ளதால், விருது கிடைத்துள்ளது.தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் கூறுகையில்,''தபால்துறை செயல்படுத்தி வரும் செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம் போன்ற எதிர்கால தேவைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாகும். குழந்தைகளின் சேமிப்பு திறனை ஊக்குவிக்கும் திட்டமாக இருப்பதால், பெற்றோர் தங்கள் (பத்து வயதுக்கு உட்பட்ட) பெண் குழந்தைகளுக்கு, செல்வமகள் சேமிப்பு கணக்கு துவங்கி பயன் பெறலாம்.விபரங்களுக்கு தங்கள் அருகிலுள்ள தபால் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.