மேலும் செய்திகள்
நீர்த்தொட்டியில் சுரக்கும் கழிவுநீர் ஊற்று
26-Aug-2024
பல்லடத்தில் அரசு மருத்துவமனை, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, பனப்பாளையம், செட்டிபாளையம் பிரிவு உள்ளிட்ட பஸ் ஸ்டாப்புகளில், நிழற்குடை இல்லாததால், பொதுமக்கள் வெயில் - மழையில் சிரமப்படுகின்றனர். பஸ்சுக்காக காத்திருப்போர், ரோட்டில் நிற்க இடம் இன்றி, ரோட்டோர கடைகளையும், மரத்தின் நிழலையும் தேட வேண்டி உள்ளது. பெண்கள், தாய்மார்கள், வயதானோர் உள்ளிட்டோர் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பஸ் ஸ்டாப்புகளில், நிழற்குடை அமைக்கப்பட வேண்டும். நிலம் அரசுக்கு கொடுக்க விருப்பம்
தாராபுரம் தாலுகா, அலங்கியத்தை சேர்ந்த 81 வயது கணேசன், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் அளித்த மனுவில், 'அலங்கியத்தில் உள்ள எனது பூர்வீக வீட்டுடன் கூடிய நிலத்தை ஒருவர் அபகரித்துக் கொண்டார். வீடு வாசலின்றி, நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். எனது உடலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு தானம் செய்து விட்டேன். எனது இடத்தையும், பொது பயன்பாட்டுக்காக அரசுக்கே தானமாக கொடுக்க விரும்புகிறேன். அவரிடம் உள்ள இடத்தை, அரசு கைப்பற்றவேண்டும்,' என கூறியுள்ளார். சேவை மைய முப்பெரும் விழா
திருவள்ளுவர் இலக்கிய பேரவை மூக்கையர் மூக்காம்மாள் சேவை மையம் சார்பில், முப்பெரும் விழா நடந்தது. மலர்மன்னன் தலைமை வகித்தார். கவிஞர் நாதன் ரகுநாதன் தலைமையில், 'தமிழ் பாடும் தாலாட்டு' கவியரங்கம் நடந்தது. சக்திவேல், ஜெயலட்சுமி கவிதை வாசித்தனர். கவிஞர் சாவித்ரி எழுதிய, துளிர் துாது என்ற புத்தகமும், ரவீந்திரன் எழுதிய 'முதன் முதலாக' என்ற நுாலும் வெளியிடப்பட்டது. மாமன்ற தலைவர் சத்ருகன் வெளியிட, கவிஞர் சாந்தி பெற்றுக் கொண்டார். அகவை முதிர்ந்த தமிழறிஞர் விருது பெற்ற எழுத்தாளர் மனோகரன், மன்ற நுாலகர் வின்சென்ட் ராஜ், மாரிமுத்து, குமாரசாமி உட்பட பலர் பேசினர். ஆலம் பாபா, பேரவை கவுரவ தலைவர் சதாசிவம் நன்றி கூறினர். முதியோர் காப்பகத்துக்கு உதவி
பெருமாநல்லுாரில் உள்ள ஆதரவற்ற முதியோர் காப்பகத்துக்கு, எம்.பி.ஜி., நிறுவனம் சார்பில், உணவு மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிறுவன உரிமையாளர்கள் கிரண் ஸ்வராஜ், பாத்திமா பாரூக் ஆகியோர் பங்கேற்று பொருட்களை வழங்கினர். பொருட்களை பெற்று கொண்ட முதியோர் மற்றும் காப்பகத்தினர் நன்றி தெரிவித்தனர். விஜயகாந்த் பிறந்த நாள் விழா
வீரபாண்டி மற்றும் மத்திய பகுதி தே.மு.தி.க சார்பில், கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த், பிறந்த நாள் விழா நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் குழந்தைவேல் தலைமை வகித்தார். அவைத் தலைவர் சரவணகுமார், முன்னிலை வகித்தார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜா முகமது, வரவேற்றார். கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் சிவராஜ், கிளை செயலாளர் ராமு, அவை தலைவர் தேவராஜ், பொருளாளர் தர்மராஜ் பங்கேற்றனர். சிலம்ப வீரர்களுக்கு பாராட்டு
கோவாவில், சர்வதேச சிலம்பம், கராத்தே போட்டி, சமீபத்தில் நடைபெற்றது. இதில், இந்தியா, மலேஷியா, ஆஸி., சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து, 622 பேர் பங்கேற்றனர். அதில், பங்கேற்ற திருப்பூர், குளோபல் ஆத்ம சக்தி சிலம்ப அகாடமியை சேர்ந்த, 41 பேரில், 36 பேர் தங்கம், ஐந்து பேர் வெள்ளி மற்றும் கராத்தேவில் மூன்று தங்கம், இரண்டு வெள்ளி பதக்கம் வென்று சாதனை புரிந்தனர். வெற்றி பெற்ற சிலம்பாட்ட மற்றும் கராத்தே வீரர், வீராங்கனையரை நிர்வாகிகள் பாராட்டினர். காங்., செயலாளராக நியமனம்
திருப்பூர் வடக்கு மாவட்ட காங்., தலைவர் கோபிநாத் பழநியப்பன். இவரை, அகில இந்திய காங்., கட்சி தேசிய செயலாளராகவும், கர்நாடகா மாநில மேலிட பொறுப்பாளராகவும் நியமித்து, அக்கட்சி தலைமை அமைப்பு பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். இதனையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் ராகுலை சந்தித்து, வாழ்த்து பெற்றார். கோபிநாத் பழநியப்பன், காங்., கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவராக பத்து ஆண்டுகளாக பணியாற்றினார்.
26-Aug-2024