கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகா தலைமையில், அலுவலர்கள் ஆறுச்சாமி, பாலமுருகன், ஸ்டாலின் பிரபு ஆகியோர் அடங்கிய குழு, நகரப் பகுதியில் உள்ள பல்வேறு இறைச்சி கடைகள் மற்றும் ஓட்டல்களில் திடீர் ஆய்வு நடத்தியது.இறைச்சி விற்பனையில் உரிய நடைமுறைகள் பின்பற்றுதல், பதிவேடுகள் பராமரிப்பு, ஊழியர்கள் தன்சுத்தம் பேணுதல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது, பேக் செய்யப்பட்ட சிக்கன் மற்றும் மட்டன் வகைகள் காலாவதியான நிலையிலும், முறையற்ற நிலையில், பதப்படுத்தப்பட்ட உட்கொள்ள தகுதியற்ற, 75 கிலோ எடையுள்ள இறைச்சிகள் ஒரு இறைச்சி கடையிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சமைத்த கெட்டுப் போன 7 கிலோ எடையுள்ள இறைச்சி வகைகள் ஒரு ஓட்டல் கடையிலும் பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டது. அந்த இரு கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, முறையாகச் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டது.