உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பி.டி.உஷா சாதனையை முறியடிக்க ஸ்ரீவர்தனி தயார்; ஸ்ரீவர்தனியின் லட்சியக் கனவு

பி.டி.உஷா சாதனையை முறியடிக்க ஸ்ரீவர்தனி தயார்; ஸ்ரீவர்தனியின் லட்சியக் கனவு

திருப்பூர்: நானுாறு மீட்டர் தடை தாண்டும் போட்டியில், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்றுள்ள, ஸ்ரீவர்தனி, தெற்காசிய விளையாட்டு போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டியில் பங்கேற்க, இன்று, பெங்களூரு செல்கிறார். இதில், ஒலிம்பிக் தொடரில் விளையாடிய வீரர், வீராங்கனைகள் முதற்கொண்டு, தேசிய, சர்வதேச அளவில் ஜொலிக்கும் பிரபல வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.திருப்பூர், ஐவின் டிராக் அகாடமியில் பயிற்சி பெற்ற ஸ்ரீவர்தனி கூறியதாவது:திருப்பூர் புனித ஜோசப் பெண்கள் கல்லுாரியில் பயின்று வருகிறேன். கடந்த, 10 ஆண்டுகளாக, 400 மீ., தடை தாண்டும் போட்டியில் பயிற்சி பெற்று, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கெடுத்துள்ளேன். தடகள வீராங்கனை, பி.டி.உஷா, 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தை, 55.42 வினாடிகளில் கடந்தது தான், இந்திய சாதனையாக இருந்து வருகிறது. இதை முறியடிக்க வேண்டும் என்பது என் விருப்பம்; பின், உலக சாதனையாக அமெரிக்க வீராங்கனை சிட்னி மெலாலின், 50 வினாடிகள் என்ற சாதனையையும் முறியடிக்க வேண்டும் என்பதும் என் லட்சியம். உடுமலை தான் என் சொந்த ஊர். தடகளப் பயிற்சிக்காக திருப்பூர் வந்தோம். இங்கு என் தந்தை ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இரவில் உடுமலை சென்று விவசாயப் பணியை கவனித்து விட்டு, பகல் நேரங்களில் திருப்பூரில் இருப்பார். அந்தளவு எனக்கு ஊக்கமளிக்கிறார்.

விடாமுயற்சி அவசியம்கடந்த 22 ஆண்டுகளாக தடகள பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ஐவின் டிராக் அகாடமி பயிற்சியாளர் அழகேசன், கடந்த, 2016 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தருண் அய்யாசாமியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். கடந்த, 2014ல், தமிழக அரசின் சிறந்த உடற்கல்வி ஆசிரியர் விருதும் பெற்றுள்ளார்.அவர் கூறுகையில், ''கடந்த, 2012 - 2016 வரை தருண் அய்யாசாமி என்னிடம் பயிற்சி பெற்றார். தெற்காசிய போட்டியில், 2 வெள்ளி வென்றார். பின், ஆசிய விளையாட்டு போட்டியிலும் பங்கேற்றார். அவருக்கு பின், ஸ்ரீவர்தனி, தெற்காசிய விளையாட்டு தகுதி போட்டியில் பங்கேற்க செல்கிறார். திருப்பூரை பொறுத்தவரை சர்வதேச அளவில் சாதிக்க கூடிய வீரர், வீராங்கனைகள் ஏராளமாக உள்ளனர். அவர்களுக்கு முறையான பயிற்சி அவசியம். விடாமல் அவர்கள் பயிற்சி செய்தால் தான், சாதிக்க முடியும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ