உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புள்ளிவிவர அறிக்கை: மாவட்ட நிர்வாகம் மும்முரம்

புள்ளிவிவர அறிக்கை: மாவட்ட நிர்வாகம் மும்முரம்

திருப்பூர்:பட்ஜெட் மானிய கோரிக்கைக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்துக்காக, புள்ளி விவர அறிக்கை தயாரிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.லோக்சபா தேர்தல் காரணமாக, தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் மட்டும் செய்துள்ளது; மானிய கோரிக்கை நடைபெறவில்லை. கடந்த, 6ம் தேதியுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இதன்காரணமாக, வழக்கமான நிர்வாக பணிகளை மாநில அரசுகள் வேகப்படுத்தியுள்ளன.தமிழக அரசு, இம்மாத இறுதியில் சட்டசபை கூட்டத்தை துவக்கி, அரசுத்துறைகள் வாரியாக மானியக்கோரிக்கையை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. முன்னதாக, வரும் 11 முதல் நான்கு நாட்களுக்கு, கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, கலெக்டர்களுடன் கலந்தாய்வு நடத்தி, மாவட்டம் வாரியாக நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும்; கடந்த நிதியாண்டில் நிறைவடைந்த பணிகள் விவரம் குறித்தும் கலந்தாய்வு நடத்த உள்ளார். மேலும், தமிழக அரசு செயல்படுத்தும் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிய உள்ளார்.

புதிய அறிவிப்புகள்தமிழக அரசு திட்டம்

இதன் வாயிலாக, மானிய கோரிக்கையின் போது, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வாயிலாக, துறைவாரியாக புதிய அறிவிப்புகளை வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 13ம் தேதி நடக்க உள்ள, ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் கலெக்டர் பங்கேற்க இருக்கிறார்.தேர்தல் பணிகள் நிறைவடைந்த நிலையில், வரு வாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூகநலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சுற்றுலாத்துறை, கூட்டுறவுத்துறை உட்பட, அரசுத்துறை வாரியாக ஆய்வுக்கூட்டம் நடந்து வருகிறது.சென்னையில், வரும் 13ம் தேதி நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், ஈரோடு உட்பட 12 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில், மாவட்ட வாரியான அனைத்து அரசுத்துறை புள்ளி விவரங்களுடன் ஆஜராக வேண்டும்.அதற்காக, ஒவ்வொரு அரசுத்துறையிலும், திட்ட பணிகள், முடிவுற்ற திட்டம், அரசு அறிவிப்புகள் என, அனைத்து புள்ளிவிவரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிப்பு பணி, திருப்பூரில் மும்முரமாக நடந்து வருகிறது.ஆண்டு கடன் திட்ட அறிக்கை, இலங்கை அகதிகள் குடியிருப்பு பணி, கல்லுாரி கனவு, பள்ளி சிறார் கண்ணொளி, உயர்வுக்குப்படி, கலைஞர் விளையாட்டு கிட் வினியோகம் உட்பட, 20 வகையான அரசுத்துறை விவரங்கள் சேகரிப்பு பணி நடந்து வருகிறது.அத்துடன், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிவிப்பு தொடர்பான தகவல் புள்ளிவிவர அறிக்கை தயாரிப்பு பணிகளை, மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி