சுங்கச்சாவடி அகற்றும் விவகாரம் போராட்டத்தில் ஒருவர் மயக்கம் விவசாயிகள் மத்தியில் பரபரப்பு
பொங்கலுார்;அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரையிலான என்.எச்., 381 தேசிய நெடுஞ்சாலையில், திருப்பூர் - தாராபுரம் ரோடு வேலம்பட்டியில் நீர்நிலை புறம்போக்கை ஆக்ரமித்து சுங்கச்சாவடி கட்டப்பட்டுள்ளது. அதனை அகற்ற வலியுறுத்தி, வேலம்பட்டி சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கம் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து நேற்று முன் தினம் கலெக்டர் உத்தரவின் பேரில் சுங்கச்சாவடி இடிப்பதாக இருந்தது. பின் திடீரென சுங்கச்சாவடி அகற்றுவதை அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். இதனை கண்டித்து சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கத்தினர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை துவங்கிய போராட்டம் நேற்று மாலை வரை நடந்தது. போராட்டத்தின் இடையே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கொள்கை பரப்பு செயலாளர் பரமசிவம் மயங்கி விழுந்தார். அவரை போலீசார் தங்கள் ஜீப்பில் ஏற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் பொங்கலுார் ஒன்றிய குழு தலைவர் குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் ஊராட்சி சார்பில் வருவாய்த்துறை, ஊராட்சித் துறை, நெடுஞ்சாலை துறையினருக்கு சுங்கச்சாவடியை ஏழு நாட்களுக்குள் அதற்றுவது குறித்து கடிதம் எழுதி, அவர்களின் ஒப்புதலுடன் அகற்றுவதற்கான தேதியை முடிவு செய்யலாம் என்றார். இதில் அவர்கள் சமாதானம் அடைந்தனர். போராட்டக்காரர்களுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார். ---போராட்டத்தின் போது மயங்கி விழுந்த விவசாயி ஒருவரை, போலீசார் தங்கள் வாகனத்தில் அழைத்து சென்று, மருத்துவமனையில் அனுமதித்தனர்.