உழவர் சந்தையில் வியாபாரிகள் ஆதிக்கம்; விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு
உடுமலை; உடுமலையில் வியாபாரிகள் ஆதிக்கத்தை கண்டித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உடுமலை உழவர் சந்தைக்கு, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள விவசாயிகள் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.தினமும், 20 டன் காய்கறிகள் விற்பனை நடக்கும் நிலையில், 3 ஆயிரம் நுகர்வோர்கள் காய்கறிகள் வாங்க வருகின்றனர். 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் உழவர் சந்தையில், விற்பனை செய்ய அடையாள அட்டை பெற்றுள்ளனர்.உழவர் சந்தையில், நீலகிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பெயரில், டீத்துாள் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட கடையில், உள்ளூர் காய்கறிகளை, நகராட்சி சந்தையில் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருவதாகவும், அதிகாரிகள் முறைகேடு காரணமாக, ஏராளமான விவசாயிகள் உழவர் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்ததோடு, விற்பனை புறக்கணிப்பு என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அதிகாரிகள் ஆய்வு செய்து ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்துள்ளனர்.இருப்பினும், வியாபாரிகள் உழவர் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருவதால், விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.உழவர் சந்தையில் வியாபாரிகளை தடுக்கவும், அனுமதிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.