தீக்குளிக்க திருநங்கை முயற்சி ;கலெக்டர் ஆபீசில் பரபரப்பு
திருப்பூர்;திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த திருநங்கை ஒருவர், திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயற்சித்தார்.அவரை தடுத்து நிறுத்திய போலீசார், காரணத்தை கேட்டறிந்தனர். கலெக்டரிடம் மனு அளிக்கச் செய்தனர்.கலெக்டரிடம் மனு அளித்த ஸ்ரேயா கூறியதாவது:திருப்பூர், காலேஜ் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். கடந்த 11 ஆண்டுகளாக, வீட்டருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறேன். எங்கள் வீட்டருகே கடை வைத்துள்ள நபர், அக்கம்பக்கத்தினரிடம் என்னை தவறாக சித்தரித்து பேசுகிறார்.எதிர் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவரின் துாண்டுதலின் பேரில், சிலர் என்னை கம்பியால் அடித்து காயம் ஏற்படுத்தினர். என் வீட்டுக்கு வந்து விசாரித்த போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.