உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மரத்தை கூறு போட முயற்சி; தடுத்த இயற்கை ஆர்வலர்கள்

மரத்தை கூறு போட முயற்சி; தடுத்த இயற்கை ஆர்வலர்கள்

திருப்பூர் : ராயபுரம் பகுதியில், பசுமை மரத்தை வெட்டி அகற்றும் முயற்சியை இயற்கை ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தினர். மரம் வெட்டிய நபர்களிடம் வருவாய் துறையினர் விசாரிக்கின்றனர்.திருப்பூர் நகரப்பகுதியில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் முன்னிட்டு, ஊர்வலம் செல்லும் வழியில் இடையூறாக உள்ள மரங்களின் கிளைகள் சில இடங்களில் வெட்டி அகற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று மதியம், ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு மரத்தை ஒரு வாகனத்தில் வந்த ஊழியர்கள் வெட்டி அகற்றும் வகையில், கிளைகளை வெட்ட துவங்கினர்.சிறிது நேரத்தில் மரம் முழுமையாக கிளைகள் வெட்டப்பட்டு, மரத்தையே வெட்டி அகற்றும் விதமாக மாறியது. இதனை கண்டு அதிர்ச்சியுற்ற இயற்கை ஆர்வலர்கள் அந்த ஊழியர்களைத் தடுத்து நிறுத்தினர். இது குறித்து அவர்கள் கேட்ட போது, மாநகராட்சியிடம் அனுமதி பெற்றுத் தான் மரம் வெட்டப்படுகிறது' என்று தெரிவித்தனர். ஆனால், அதற்கான எந்த உத்தரவு கடிதமும் இல்லை.உடனடியாக இயற்கை ஆர்வலர்கள் போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து விசாரித்த போதும், எந்த உத்தரவும் இல்லை எனத்தெரிந்தது. இதையடுத்து மரக்கிளைகள் ஏற்றிய வாகனத்தை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !