உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரதமர் மோடிக்கு போலி புகார் கடிதம்; கமிஷனரிடம் வால்ரஸ் நிறுவனம் புகார்

பிரதமர் மோடிக்கு போலி புகார் கடிதம்; கமிஷனரிடம் வால்ரஸ் நிறுவனம் புகார்

திருப்பூர்; திருப்பூரில் உள்ள வால்ரஸ் நிறுவனம் பெயரில் போலியாக பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்ட கடிதம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.திருப்பூரைச் சேர்ந்த நுால் மற்றும் கார்மென்ட்ஸ் நிறுவனம் வால்ரஸ். இதன் இயக்குநர் வால்ரஸ் டேவிட் நேற்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் அளித்த புகார் மனு விவரம்:கடந்த சில நாட்கள் முன், எனது முகவரிக்கு ஒரு தபால் வந்தது. அது காங்கயத்திலிருந்து பதிவு தபாலில் அனுப்பப்பட்டிருந்தது. அதில், எனது நிறுவனமான வால்ரஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரில் பிரதமர் மோடிக்கு இறக்குமதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக புகார் தெரிவிப்பது போன்ற தகவல்களுடன் ஒரு போலியான கடிதமாக இருந்தது.மேலும் அதில் இறக்குமதி மோசடி என்ற கருத்தில், உண்மைக்கு புறம்பான பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த கடிதம் பிரதமர் அலுவலகம் மட்டுமின்றி, எனது தொழில் தொடர்புடைய பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை நானோ, எனது நிறுவனம் சார்பிலோ அனுப்பவில்லை.எங்கள் நிறுவனத்தின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண்ணை தவறாகவும், போலியாகவும் பயன்படுத்தியுள்ளனர். அதன் மூலம், எனக்கும், எனது தொழிலுக்கும் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதோடு, சட்ட சிக்கல்களையும் ஏற்படுத்தும் ஒரு மோசமான, தவறான செயல்.தொழில் போட்டி காரணமாக அந்த கடிதம் அனுப்பப்பட்டதா எனத் தெரியவில்லை. அந்த போலி கடிதத்தை அனுப்பியவர் யார் என்றும் தெரியவில்லை. எனது தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் போலியான கடிதத்தை அனுப்பியவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.'வால்ரஸ்' டேவிட் கூறியதாவது:எங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரியுடன் பிரதமருக்கும், பல்வேறு எனது தொழில் தொடர்பு நிறுவனங்களுக்கும் இக்கடிதம் சென்றுள்ளது. அவ்வாறு அனுப்பிய ஒரு நிறுவனத்தின் முகவரி தவறாக இருந்த நிலையில், எனது முகவரிக்கு திரும்ப வந்த போது தான் இந்த விவரமே தெரிய வந்துள்ளது.பிரதமர் அலுவலகம் சென்ற கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனது நிறுவனத்தின் பெயர் மற்றும் வர்த்தகத்தை பாதிக்கும் நோக்கில் இதை செய்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ