துர்நாற்றத்துடன் விவசாயிக்கு வரவேற்பு? வேளாண் விற்பனை கூடத்தில் அவலம்
பல்லடம் : பல்லடம், மங்கலம் ரோட்டில் ஒருங்கிணைந்த வேளாண் விற்பனை கூடம் மற்றும் கிடங்கு உள்ளது. விளை பொருட்களை இருப்பு வைக்கவும், கொள்முதல் செய்வதற்காகவும், விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர் இங்கு வந்து செல்கின்றனர்.ஆனால், வேளாண் விற்பனை கூடத்தின் நுழைவு வாயில், துர்நாற்றத்துடன் வரவேற்கிறது. நுழைவு வாயிலின் முன்புறம், கழிவுநீர் கால்வாய் திறந்த வெளியில் செல்வதுடன், அருகிலேயே நகராட்சியின் கழிவு நீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால், விற்பனைக்கூடத்துக்கு செல்பவர்கள் கழிவுநீர் கால்வாயை தாண்டித்தான் சென்று வருகின்றனர்.ஒரு கால்வாய் மட்டுமே சென்று வந்த நிலையில், தற்போது, மற்றொரு கழிவுநீர் கால்வாயை நகராட்சி உருவாக்கியுள்ளது. நுழைவு வாயிலில், கழிவுநீருடன் குப்பைகள், பாட்டில்கள் உள்ளிட்டவையும் தேங்கி கிடக்கின்றன. தற்போது, கழிவுநீர் கால்வாயில் செடி - கொடிகள் முளைத்து வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.இதனால், விற்பனை கூடம் முன், துர்நாற்றம் வீசுவதுடன், திறந்த நிலையில் உள்ள இரண்டு கழிவு நீர் கால்வாயையும் தாண்டி விற்பனை கூடத்துக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே, திறந்த நிலையில் உள்ள கழிவு நீர் கால்வாயை மூடுவதுடன், கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.