10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் துவக்கம்
திருப்பூர்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்க உள்ளது; தேர்வறைகளை தயார்படுத்தும் இறுதிகட்ட பணியை, நேற்று தேர்வுத்துறை சுறுசுறுப்பாக மேற்கொண்டது.மாவட்டம் முழுதும், 108 மையங்களில் தேர்வு துவங்குகிறது. தமிழ் தேர்வு இன்று நடக்கிறது. ஏப்., 2ல் ஆங்கிலம், 4ல், விருப்ப மொழிப்பாடம், 7ல் கணிதம், 11ல் அறிவியல், 15ல் சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது.மாவட்டத்தில் உள்ள, 348 பள்ளிகளில் பயிலும், 15 ஆயிரத்து, 87 மாணவர்கள், 15 ஆயிரத்து, 148 மாணவியர், மொத்தம், 30 ஆயிரத்து, 235 பேர் தேர்வெழுதுகின்றனர். தனித்தேர்வர்களாக, 1,097 பேர் தேர்வு எழுதுகின்றனர்.முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், அறை கண்காணிப்பாளர் உட்பட, 1,780 பேர் தேர்வு பணியில் ஈடுபடுகின்றனர். முறைகேடுகளை தடுக்க கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காளிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள், கல்வி அலுவலர் தலைமையில், 170 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டு, தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.நேற்று தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை மற்றும் கழிப்பிட வசதி, மின்சாரம், காற்றோட்டம் உள்ளிட்டவை குறித்து நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தேர்வு மையங்களில் மாணவர் தேர்வு எழுதும் இருக்கைகளில் பதிவு எண் ஒட்டப்பட்டது.