உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 18 நாள்... 13.50 கோடி மீட்டர்... ரூ.540 கோடி இழப்பு: தீவிரமடையும் விசைத்தறியாளர் போராட்டம்

18 நாள்... 13.50 கோடி மீட்டர்... ரூ.540 கோடி இழப்பு: தீவிரமடையும் விசைத்தறியாளர் போராட்டம்

அவிநாசி: கூலி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, விசைத்தறியாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம், நேற்று, 18வது நாளாக தொடர்கிறது.கடந்த, 2022ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த கூலியிலிருந்து குறைக்கப்பட்ட கூலியை முழுமையாக வழங்க வேண்டும். ஒப்பந்த கூலியை குறைக்காமல் வழங்கும் வகையில் சட்டப் பாதுகாப்புடன் கூடிய புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திட ஜவுளி உற்பத்தியாளர்களை மாவட்ட நிர்வாகம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.ஆண்டுக்கு ஆறு சதவீதம் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில், கடந்த மாதம், 19ம் தேதி காலவரையற்ற உற்பத்தி நிறுத்த போராட்டத்தை துவக்கினர்.நேற்று, 18-வதுநாளாக தொடர்ந்த போராட்டத்தில் பெருமாநல்லுார், அவிநாசி, புதுப்பாளையம், தெக்கலுார், சோமனுார், கண்ணம்பாளையம் மற்றும் அன்னுார் ஆகிய பகுதிகளை சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் ஆயிரக்கணக்கான விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

3 லட்சம் தொழிலாளர் பாதிப்பு

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தெக்கலுார் கிளை சிவகுமார் கூறியதாவது:பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிக்கூடங்களில் உள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குவதில்லை. இதனால், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் மூன்று லட்சம் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். தினமும், 75 லட்சம் மீட்டர் காடா துணி உற்பத்தி பாதிக்கப்படுவதால், இதுவரை ஏறத்தாழ, 540 கோடி ரூபாய் மதிப்பிலான, 13.50 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.விசைத்தறிக்கூடங்கள் தொடர்ந்து இயங்காமல் முடங்குவதால் இப்பகுதியில் உள்ள கிராமப் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த 24ம் மற்றும் 25ம் ஆகிய தேதிகளில் திருப்பூர் மற்றும் கோவை கலெக்டர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமூகத் தீர்வு எட்டப்படவில்லை.கடந்த 31ம் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், கோவை தொழிலாளர் நல ஆணையர், மாநகராட்சி மேயர் தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒரு சிலர் கூலி உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், மேலும் ஓரிரு நாட்களில் கோரிக்கைகளுக்கு முழு தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் உறுதியளித்தனர்.

தனித்தனியாகபேச்சுவார்த்தை

இதனால், 2ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று (நேற்று முன்தினம்) கோவை, கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர், தொழிலாளர் நல ஆணையர் உள்ளிட்டோர் முன்னிலையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் ஆகியோர் தனித்தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

வேலைநிறுத்தம் தொடரும்

அதில், 2022ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த கூலியை தரவும்,தற்போது கேட்டுள்ள புதிய கூலி உயர்வை இன்னும் ஒரு சில மாதங்களுக்குப் பின் தருவதாகவும், இதனை ஒப்பந்தம் போட்டு தருவதாகவும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தினர் விசைத்தறி உரிமையாளர்களிடம் தெரிவித்தனர்.ஆனால், இது ஏற்புடையதல்ல என்பதே விசைத்தறியாளர்களின் ஒட்டுமொத்த கருத்து. எனவே, எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடரும். அடுத்த கட்ட போராட்டம் குறித்து கூட்டுக்கமிட்டி சார்பில், விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ