உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மாவட்ட போலீசுக்கு தலைவலி தந்த 2025

 மாவட்ட போலீசுக்கு தலைவலி தந்த 2025

திருப்பூர் மாவட்ட போலீஸ் துறை, அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை என, ஐந்து சப்-டிவிஷன்களை கொண்டுள்ளது. இந்தாண்டு முழுவதும், மாதத்துக்கு ஒரு ஏதாவது சம்பவம் நடந்து மாவட்ட போலீசாருக்கு மனசோர்வை ஏற்படுத்திவந்தது. இதுதவிர, அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை போன்ற பகுதியில் அடிக்கடி நடக்கும் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தலைவலியை உண்டாக்கியது. கடந்த ஆக., மாதம் உடுமலை, குடிமங்கலத்தில் ரோந்து பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல், தோட்டத்தில் நடந்த குடும்ப பிரச்னையை விசாரிக்க சென்றபோது, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலையால், ஒட்டு மொத்த போலீஸ் உயரதிகாரிகளும் திருப்பூர் வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய, தந்தை, இரு மகன்களை போலீசார் கைது செய்தனர். மகன் மணிகண்டன் என்பவர் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற போது, 'என்கவுன்டர்' செய்யப்பட்டார். தாராபுரத்தில் ஐகோர்ட் வக்கீல் முருகானந்தம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். பள்ளி தாளாளர் உட்பட, 18 பேரை போலீசார் கைது செய்தனர். பல்லடத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில், நான்கு மாதமாக வழக்கில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது. பா.ஜ. உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தது. 'சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. பின், ஈரோட்டில் நடந்த தம்பதி கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட, நான்கு பேர் இவ்வழக்கில் தொடர்புடையது தெரியவந்தது. புத்தாண்டில் குற்றங்களை குறைக்க, தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து திட்டமிட்டு வருகின்றனர். இதுதவிர, கிராமப்புறங்களில் கூடுதல் ரோந்து மேற்கொள்ளுதல், தனியாக வசிப்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், பின்பற்ற வேண்டியவற்றை குறித்து மாவட்ட போலீசார் தீவிரமாக விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ