உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒரே நாளில் 3 கொலைகள் திருப்பூரில் கடும் அதிர்ச்சி

ஒரே நாளில் 3 கொலைகள் திருப்பூரில் கடும் அதிர்ச்சி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று கொலைகள் நடந்துள்ளன. திருப்பூர் மாவட்டம், முத்துார், வரக்காளிபாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி, 45; உறவினர் ராஜ்குமார், 45, என்பவருடன் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இருவரிடையே இடம் விற்பனையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு, தந்தை கிட்டுசாமி, 67, உடன் டூ - வீலரில் ஈஸ்வரமூர்த்தி, வெள்ளகோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். வரக்காளி பாளையம் பிரிவு அருகே, பின்னால் ஜீப்பில் வந்த ராஜ்குமார், டூ - வீலர் மீது மோதினார். ஈஸ்வரமூர்த்தியும், கிட்டுசாமியும் கீழே விழுந்தனர். உடனே, ஈஸ்வரமூர்த்தி மீது ராஜ்குமார் ஜீப்பை ஏற்றியுள்ளார். பின், இறங்கி வந்து இரும்பு ராடால் தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் ஈஸ்வரமூர்த்தி இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர். குண்டடம், பெரியகுமாரபாளையத் தைச் சேர்ந்தவர் மயிலாத்தாள், 80; பேரன் விஜயகுமார், 40, என்பவருடன் வசித்தார். நேற்று முன்தினம் இரவு, போதையில் வீட்டுக்கு வந்த விஜயகுமார், பாட்டியிடம் தகராறு செய்தார். பின், அவரை அரிவாளால் தலையில் வெட்டி, விஜயகுமார் கொலை செய்தார். அவரை குண்டடம் போலீசார் கைது செய்தனர். காங்கேயம், குட்டப்பாளையம், காட்டுப் பாளையத்தை சேர்ந்த விவசாயி சிவகுமார், 50, தோட்டத்தில் டிரைவராக வெள்ளகோவிலை சேர்ந்த கவுதம், 30, வேலை செய்து வந்தார். நேற்று மாலை, போதையில் இருந்த கவுதம், சிவகுமாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கவுதம், கட்டையால் சிவகுமாரை அடித்து கொன்று விட்டு தப்பியோடினார். கவுதம், குடும்பத்துடன் பண்ணை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். கவுதம் மனைவியிடம் சிவகுமார் பழகியுள்ளார். இது கவுதமுக்கு பிடிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட தகராறில், கவுதம் மரக்கட்டையால் அடித்து சிவகுமாரை கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி