மாவட்டத்தில் 5 சிறிய ஜவுளி பூங்காக்கள்
பல்லடம்; ''திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு ஜவுளிப்பூங்காக்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும் மூன்று ஜவுளிப்பூங்காக்கள் கட்டுமானப்பணியில் உள்ளன'' என்று அமைச்சர் காந்தி கூறினார். பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையம் கிராமத்தில், சிறிய அளவிலான ஜவுளி பூங்கா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கார்த்திகேயா வீவிங் பார்க் ஜவுளி பூங்கா திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். அமைச்சர்கள் காந்தி, சாமிநாதன், கயல்விழி ஆகியோர் ஜவுளி பூங்காவை திறந்துவைத்தனர். பின், அமைச்சர் காந்தி கூறியதாவது: தமிழகத்தில், ஜவுளி தொழிலின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கவும், சிறிய ஜவுளி பூங்கா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் கோரிக்கையின் அடிப்படையில், தகுதியான ஜவுளி தொழிற்கூடம், பொது வசதி மையம் ஆகியவற்றுக்கான உட்கட்டமைப்பு கட்டுமானத்துக்கு, தமிழக அரசு சார்பில், திட்டத் தொகையில், 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. இதேபோன்று, சிறியளவிலான ஜவுளி பூங்கா திட்டத்துக்கு, குறைந்தபட்சம் இரண்டு ஏக்கர் பரப்பில், மூன்று ஜவுளி உற்பத்தி தொழில் கூடங்கள் நிறுவ வேண்டும். இதற்கும், தகுதி வாய்ந்த திட்ட மதிப்பில், 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. ரூ.13 கோடி வணிகம் பல்லடத்தில் துவங்கப்பட்டுள்ள ஜவுளி பூங்கா மூலம், ஆண்டுக்கு, 13 கோடி ரூபாய் அளவுக்கு வணிகம் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான ஜவுளி பூங்கா திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டத்தில், 5 பூங்காக்கள் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில், 2 பூங்காக்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மற்றவை கட்டுமான பணியில் உள்ளன. இவ்வாறு,அமைச்சர் கூறினார். கைத்தறி மற்றும் துணி நுால் துறை செயலர் அமுதவல்லி, இயக்குனர் லலிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.