மேலும் செய்திகள்
தீபாவளி பண்டிகையையொட்டி இறைச்சி கடைகளில் கூட்டம்
01-Nov-2024
திருப்பூர் ; தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இறைச்சி கடைகளில் விற்பனை அதிகரித்தது. மீன் மார்க்கெட் கூட்டத்தால், திணறியது.தீபாவளி பண்டிகையன்று திருப்பூரில் இறைச்சி கடைகளில் விற்பனை களை கட்டியது. ஆட்டு இறைச்சி, கிலோ, 750 - 850 ரூபாய்; கறிக்கோழி, 170 - 220 ரூபாய் என விற்றது.காலை முதல் மதியம் வரை இறைச்சியை வரிசையில் காத்திருந்து, அசைவ பிரியர்கள் வாங்கி சென்றனர். தீபாவளி தொடர் விடுமுறையை தொடர்ந்து நேற்று, இறைச்சி கடைகள் திறக்கப்பட்டன.தீபாவளியை விட நேற்று விலை கிலோவுக்கு 20 - 50 ரூபாய் வரை குறைக்கப்பட்டது. வாடிக்கையாளர் கூட்டமாக இல்லாமல், ஒருவர் பின் ஒருவராக தான் வர துவங்கினர்.மதியத்துக்கு பின் விற்பனை சற்று சுறுசுறுப்பானாலும், தீபாவளி நாள் போன்ற விற்பனை நேற்று இல்லையென, இறைச்சி வியாபாரிகள் பலர் தெரிவித்தனர். கந்த சஷ்டி விழா துவக்கத்தால் பலர் விரதம் இருப்பதால் இறைச்சி விற்பனை சற்று குறைந்திருப்பதாகவும் வியாபாரிகள் கருதுகின்றனர். ஒரு வாரம் மீன் விற்பனை
தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு தீபாவளிக்கு முந்தைய நாட்களில் மீன் வரத்து குறைவாக இருந்தது; விற்பனை சற்று அதிகரித்ததால், விலை உயர்ந்தது. ஆனால், ஞாயிறு விற்பனைக்கு நேற்று முன்தினமே வரத்து அதிகரித்தது. நேற்று விலை உயரவில்லை. பெரும்பாலான மீன்களின் விலை குறைவு என்பதால், வாடிக்கையாளர்களும் அதிகளவில் மீன்களை வாங்கி சென்றனர்.புரட்டாசி மாதத்துக்கு பின் நடப்பு வாரம் தான் அதிக மீன் விற்பனை நடந்துள்ளது. மொத்த வியாபாரிகள் பலர் மீன் வாங்கி விற்க ஆர்வம் செலுத்ததால், மீன் வாங்க பலரும் மீன் மார்க்கெட்டுக்கு வந்தனர்.நேற்று, மத்தி மீன் மிக குறைவாக, கிலோ, 70 - 90 ரூபாய்க்கு விற்றது. வஞ்சிரம் 550 - 650, நண்டு, 350 - 450 ரூபாய். பாறை 140 - 180 ரூபாய்க்கு விற்றது. நேற்று ஒரே நாளில், 60 டன் கடல் மீன்கள்; 20 டன் அணை மீன்கள் மாலைக்குள் விற்றுத் தீர்ந்தன.
01-Nov-2024