ஒடிஷாவில் இருந்து கஞ்சா பெண் உட்பட 8 பேர் கைது
பல்லடம்: பல்லடம் அருகே, கஞ்சா கடத்தி வந்த வடமாநில தொழிலாளர்கள், 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பல்லடம் பகுதியில், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை நடந்து வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, விசாரணை நடத்திய போலீசார், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட, வட மாநில பெண் ஒருவர் உட்பட, 8 பேரை கைது செய்தனர். போலீசார் கூறியதாவது: பீஹாரை சேர்ந்த சகோதரர்கள் சல்மான், 21 மற்றும் சிக்கந்தர், 18 ஆகியோர், ஒடிஷா மாநிலம், வரம்பூரில் இருந்து கஞ்சா கடத்தி, சென்னைக்கு ரயிலிலும், சென்னையில் இருந்து, ஆம்னி பஸ்சிலும் பல்லடத்துக்கு கொண்டு வந்தனர். இருவரும், இவர்கள் பதுக்கி வைத்திருந்த, 46 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களின் கூட்டாளிகளான யோகேஸ்வரி, 19, சந்தோஷ்குமார், 25, இப்ராஹிம், 24, ராஜூ, 27, அன்புமணி, 26, பிரபாகரன், 26 ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நேபாள் மாநிலத்தைச் சேர்ந்த இப்ராஹிம் புழல் சிறையிலும், மற்றவர்கள் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும், பல்லடம், திருப்பூர் பகுதியில் வசித்தபடி, தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். தற்போது கைது செய்யப்பட்டவர்கள் மீது, பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் கஞ்சா கடத்தல் வழக்குகள் ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது.