உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கனியட்டும் பிள்ளை மனம்... வலிக்காது பெற்றவர் இதயம்

கனியட்டும் பிள்ளை மனம்... வலிக்காது பெற்றவர் இதயம்

''எங்களிடம் வரும் ஒவ்வொருவரும் ஒரு விதம். தங்களுக்கு நேர்ந்த சிரமங்களை எண்ணி, நாள் கணக்கில், மாதக்கணக்கில் பேசாமல் இருந்தவர்கள் பலர் உண்டு. இங்குள்ள சூழல் பிடித்த பின் தான் அவரது குடும்பம், உறவுகள் பற்றி ஒவ்வொருவரும் பேச துவங்குவர். பராமரிப்பு மையம் என்பது தனி குடும்பம்; தனி உலகம்.''கண்ணில் பரிதவிக்கும் நிலையில் முதியோர் யாராவது கண்டால் உடனடியாக என்ற 77086 69769 என்ற உதவி எண்ணுக்கு அழையுங்கள். தேவையிருப்பின் ஆம்புலன்ஸ் உதவியுடன் வந்து அழைத்துச் செல்கிறோம். நம்மை பெற்ற தாய், தந்தையரை காப்பாற்றுவதை விடவும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பதை விடவும், அவர்களிடம் பெறும் ஆசீர்வாதத்தை விடவும் வேறு வெகுமதி நமக்கும் எங்கும் கிடைக்காது...''கிரிநாதனுக்குச் சொல்லும்போதே, கண்களில் ஈரம் கசிகிறது. கடந்த 2012 முதல், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் - முதியோர் பராமரிப்பு பிரிவு மற்றும் உதவி மையத்தின் ஊழியர்தான் கிரிதரன்.ஆதரவற்ற, சாலையோரங்களில் தவிக்கவிடப்படுவோரை மீட்டு தேவையான சிகிச்சை, உதவிகளை அளிப்பதுதான் இம்மையத்தின் நோக்கம்.

கண்டுகொள்ளாத மகள்

மையத்தில் சிகிச்சை பெற்ற 74 வயது முதியவர், உடல் நலம் தேறிய பின், 'மகளை பார்க்க வேண்டும்; கொண்டுபோய் விடுங்கள்' என கூறி முகவரியைத் தந்துள்ளார். போனில் அழைத்து தகவலைத் தெரிவித்த பின்னும், மகள் கண்டுகொள்ளவில்லை. மனம் நொந்த அந்த முதியவர், 'நான் எங்காவது போகிறேன்' எனப் புறப்பட்டுள்ளார்; அவரை ஆற்றுப்படுத்தியுள்ளனர். சில நாட்களில் இயல்புக்கு திரும்பிய அவர், தற்போது மையத்தில் மகிழ்ச்சியுடன் உள்ளார்.

கனிவு கிடைக்காத பெண்மணி

'என் வீட்டுக்காரர் இறந்திட்டாருங்க; குழந்தைகள் இல்லை; கால் வலி தான் அதிகமாக இருக்கு' என தவழ்ந்து வந்த பெண்மணிக்கு, அறுவை சிகிச்சை செய்து, அரசு டாக்டர்கள் குணப்படுத்தினர். அவரோ, ''நான் யாரை தேடி இனிபோவேன். எங்காவது விடுதியில் விட்டுடுறாங்க'' என சொல்லியிருக்கிறார். அவரும் தற்போது மையத்தில் உள்ளார்.பராமரிப்பு மையத்தில் உள்ள, 94 வயது மூதாட்டி அங்காத்தாள் கூறுகையில், ''நல்லதும், கெட்டதும் எல்லாம் இருக்கும்; நம்ம கூட பிறந்தவங்களை எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்கக்கூடாது. பெத்த மனம் கல்லாக கூடாதுன்னு எங்களை எல்லாம் சொல்லி வளர்ந்தாங்க. குழந்தைகளிடம் 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை; தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை' என ஆழமாக சொல்லி வளர்க்கணும். ஏற்கனவே பாசம், மனிதாபிமானம் எல்லாம் குறைஞ்சு போயிட்டு இருக்கு. இனியும் சொல்லித்தரலைன்னா, தவிக்க விடப்படும் பெற்றோர்கள், இனியும் அதிகமாயிடுவாங்க'' என்று கூறுகிறார். அனுபவச் சொல் - நுாறு சதவீதம் உண்மை. பிள்ளை மனம் கனிந்தால், பெற்றவர் இதயம் வலிக்காதல்லவா!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை