உடுமலை: உடுமலையில், அரசு அலுவலகங்கள், மருத்துவமனை மற்றும் ரோடுகளின் மையத்தடுப்புகளில், அரசியல் கட்சியினர், தனியார் நிறுவன விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, அலங்கோலமாக காட்சியளிக்கிறது. உடுமலையில், பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரோடு சந்திப்புகளில் விதி மீறி, பிளக்ஸ் பேனர்கள் அதிகளவு வைக்கப்படுகிறது. இந்நிலையில், அரசு சுவர்களிலும், அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் நிறுவனங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, அலங்கோலமாக மாறியுள்ளது. அரசுத்துறை அதிகாரிகள், தங்கள் அலுவலக சுவர் போஸ்டர் ஒட்டும் மையமாக மாறியுள்ளது குறித்து கண்டு கொள்வதில்லை. தாலுகா அலுவலக வளாகத்தில், தாலுகா அலுவலகம், நீதிமன்றம், கிளைச்சிறை, சார்பதிவாளர் அலுவலகம், சார்நிலைக்கருவூலம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்லும் இப்பகுதியிலுள்ள, சுவர்களில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு, போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அதே போல், அரசு மருத்துவமனை வளாகத்தில், பழைய சுவர் மட்டுமின்றி, தற்போது, புதிதாக கட்டப்பட்ட சுவர்களிலும், போஸ்டர்கள் ஒட்டப்பட்டும், படங்கள் வரைந்தும், முகம் சுழிக்கும் வகையிலான போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா மற்றும் பஸ் ஸ்டாண்ட் வளாகம் முழுவதும், ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதோடு, தற்போது புதிய முறையாக, மிகவும் நீளமான பிளக்ஸ் பேனர்கள் ஒட்டப்பட்டு, சுவர்களின் தரமும் கேள்விக்குறியாகிறது. பிரதான ரோடுகளான, பழநி ரோடு, தாராபுரம் ரோடுகளில் உள்ள மையத்தடுப்புகளிலும், போக்குவரத்து எச்சரிக்கை குறியீடுகள், அறிவிப்பு பலகைகளை மறைத்து, போஸ்டர்கள் அதிகளவு ஒட்டப்படுகிறது. இதனால், வாகன ஓட்டுனர்கள் கவனச்சிதறல் ஏற்பட்டு, விபத்து ஏற்படுகிறது. நகரிலுள்ள சந்தை வளாக சுற்றுச்சுவர், பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள் என அரசுக்கு சொந்தமான சுவர்கள், பலகைகளில் விதி மீறியும், சட்ட விரோதமாகவும், விளம்பரங்கள் ஒட்டப்படுகின்றன. அரசு அலுவலங்கள், மருத்துவமனைகளின் சுவர்கள் விளம்பர மையமாகி வருகின்றன. எனவே, அரசு சுவர்களில் விளம்பர போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கவும், முழுமையாக அவற்றை அகற்றி, வர்ணம் பூசவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.