நாய் வளர்க்க உரிமம் அவசியம்
அ ரசின் வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அமைக்கப்படும் அடுக்கு மாடி குடியிருப்புவாசிகள் நாய்கள் வளர்க்க தடை உள்ள நிலையில், 'திருப்பூர் நெருப்பெரிச்சலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் நாய் வளர்க்கின்றனர்; இதனால், பிறருக்கு இடையூறு ஏற்படுகிறது' என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, பத்து ரூபாய் இயக்க திருப்பூர் மாவட்ட துணை செயலாளர் செல்லம், தமிழ்நாடு உள்ளாட்சி முறை மன்ற நடுவரிடம் வழக்கு தொடுத்தார். திருப்பூர் மாநகராட்சிக்கு எதிரான இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் நடந்தது. செல்லம் கூறியதாவது: அடுக்குமாடி குடியிருப்பில் நாய்கள் வளர்க்கக்கூடாது என்ற விதிப்படி, அங்கு வளர்க்கப்படும் நாய்களை, மாநகராட்சி நிர்வாகத்தினர் பிடித்து செல்ல வேண்டும் என மனு செய்திருந்தேன். இந்த வழக்கில் ஆஜரான மாநகராட்சி தரப்பு அதிகாரிகள், அடுக்குமாடி குடியிருப்பு மட்டுமின்றி, நகரில் உள்ள 60 வார்டுகளிலும் நாய்கள் வளர்ப்போர், மாநகராட்சியின் உரிமம் பெற வேண்டும்; இதுதொடர்பாக மாநகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது; இந்த தீர்மானம் மாநகராட்சி 'கெஜட்'டில் பதிவு செய்யப்பட்ட பின், 3 மாத அவகாசத்துக்குள் நாய் வளர்ப்போர் உரிமம் பெறாவிட்டால் அந்நாய்களை பிடித்து, காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினர். மேலும், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணியும், தனியார் நிறுவனத்தினர் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், விளக்கம்அளித்தனர். இவ்வாறு, அவர் கூறினார்.