காங்கயம் அருகே கல்குவாரிக்கு வெடி மருந்து கொண்டு சென்ற லாரி சிறைப்பிடிப்பு
காங்கயம்:காங்கயம் அருகே பழையகோட்டை கிராமத்தில் தனியார் கல் குவாரிக்கு வெடி மருந்து கொண்டு சென்ற வாகனத்தை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.காங்கயம் அருகே பழையகோட்டை ஊராட்சி, குட்டப்பாளையத்தில் ஆர். பி.பி நிறுவனத்திற்கு சொந்தமாக சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் கல் குவாரி மற்றும் எம். சாண்ட் குவாரி செயல்பட்டு வருகிறது.ஆரம்பம் முதலே இக்குவாரிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.அரசு விதிகளை மீறி இக்குவாரிக்கு அருகே 300மீட்டருக்குள் வீடுகளும், 50 மீட்டருக்குள் பொது வழிப்பாதையும் , 11 மீட்டருக்குள் மின் கம்பகும், 300 மீட்டருக்குள் உயர் மின் கம்பமும் உள்ள நிலையில், சட்ட விரோதமான இக்குவாரியை தடை செய்ய வேண்டும் என கிராம மக்கள் சுற்றுச்சூழல் துறைக்கும், கனிம வளத்துறைக்கு புகார் அனுப்பி வந்தனர். விதிகளின் படி நாணல் வெடி மட்டுமே வைக்க வேண்டும், பகல் நேரங்களில் வெடி வைக்க வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில் நேற்று அரசால் தடை செய்யப்பட்ட நேரத்தில்,மாலை 6 மணிக்கு மேல் டெட்டனேட்டர் எனப்படும் சட்ட விரோத வெடி மருந்துகளை வெடிக்க கொண்டு சென்ற வாகனத்தை கிராம மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காங்கேயம் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் போலீசார், மற்றும் வருவாய்த்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை கட்டுப்பாட்டிற்கு வெடி மருந்து வாகனம் கொண்டு செல்லப்பட்டது.இதனை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.காங்கயம் அருகே வெடி மருந்து ஏற்றி சென்ற வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.