உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சந்தைக்கு நிரந்தர கட்டடம் தேவை! காரத்தொழுவு மக்கள் கோரிக்கை

சந்தைக்கு நிரந்தர கட்டடம் தேவை! காரத்தொழுவு மக்கள் கோரிக்கை

மடத்துக்குளம்: மாநில நெடுஞ்சாலையில் நடக்கும் வாரச்சந்தையை இடம் மாற்றி, நிரந்தர கடைகள் கட்ட வேண்டும் என காரத்தொழுவு சுற்றுப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மடத்துக்குளம் ஒன்றியம், காரத்தொழுவில், வாரந்தோறும் செவ்வாய்கிழமையன்று, வாரச்சந்தை நடக்கிறது. உடுமலை - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையையொட்டி, 50க்கும் மேற்பட்ட ரோட்டோர கடைகள் அமைத்து காய்கறிகள் உள்ளிட்ட பல பொருட்களை விற்பனை செய்கின்றனர். காரத்தொழுவில், மாநில நெடுஞ்சாலை மற்றும் கணியூர் ரோடு சந்திக்கும் நால்ரோடு சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகளவு இருக்கும்.நெரிசலான ரோட்டில், ரோட்டோர கடைகள் அமைப்பதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இக்கடைகளுக்கு, பொருட்கள் வாங்க வருபவர்கள், தங்கள் வாகனங்களை, ரோட்டின் மீது நிறுத்திச்செல்கின்றனர். இதனால், மாநில நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனங்களுக்கு போதிய இடமிருப்பதில்லை. மேலும், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு விலகி நிற்கவும் இடமிருப்பதில்லை. இதனால், வாகன ஓட்டுநர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, மடத்துக்குளம் ஒன்றிய நிர்வாகம் வாயிலாக வாரச்சந்தைக்கு நிரந்தர கட்டடம் கட்டி, கடைகளை அங்கு இடம் மாற்றினால், அனைத்து தரப்பினரும் பயன்பெறுவார்கள். மேலும், சுற்றுப்பகுதி விவசாயிகளும் தங்கள் விளைபொருட்களை எளிதில் சந்தைப்படுத்தி கொள்ள முடியும். எனவே, வாரச்சந்தைக்கு நிரந்தர கட்டடம் அமைப்பது குறித்து ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை ஊரக வளர்ச்சித்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ