பயன்படுத்தாமல் வீணாகிறது சிறிய பொக்லைன் இயந்திரம்
உடுமலை; உடுமலை நகராட்சியில், 27 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட சிறிய ரக பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தாமல் வீணாகிறது.உடுமலை நகர ரோடுகளை துாய்மைப்படுத்தும் வகையிலும், ரோட்டோரங்களிலுள்ள செடி, கொடிகள், மண் மற்றும் கழிவுகளை அகற்றும் வகையிலும், 'பாப்காட்' எனப்படும் சிறிய அளவிலான பொக்லைன் இயந்திரம், 27 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டது.இந்த இயந்திரம் வாயிலாக, சிறிய அளவிலான குடியிருப்பு ரோடுகளில் துாய்மை பணி மேற்கொள்ள முடியும். மேலும், மழை காலங்களில் துார்வாரப்படும் சாக்கடை கழிவுகளை அகற்றி, லாரிகளில் ஏற்றும் வகையில், பொக்லைன் மற்றும் மண் அகற்றும் வாகனம் வாங்கப்பட்டது.இதற்கான ஆபரேட்டர் நியமிக்காமல், இரு ஆண்டாக இயக்கப்படாமல், சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில், வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, நகராட்சியில் குப்பை சேகரிக்கும் துாய்மை பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மழை நீர் வடிகால் துார்வாரும் பணி, மண் அகற்றும் பணிகளுக்கு தனியார் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.நகராட்சியால் வாங்கப்பட்ட வாகனம், பயன்பாடின்றி வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகிறது. இந்த வாகனத்தை பயன்படுத்தவும், துாய்மை பணி மட்டுமன்றி, ரோடுகளில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றவும், பயன்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.