சபரி ஓடையில் சுவர் கட்ட வேண்டும்: வார்டு சபா கூட்டத்தில் தீர்மானம்
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி 58 வது வார்டு கே.செட்டிபாளையத்தில் நடந்த வார்டு சபா கூட்டத்தில், சபரி ஓடைக்கு தடுப்பு சுவர் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.வார்டு கவுன்சிலர் காந்திமதி தலைமையில் வார்டு சபா கூட்டம் நடந்தது. உதவி செயற்பொறியாளர் முனியாண்டி முன்னிலை வகித்தார். இதில் மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் வார்டு பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து வார்டு பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.செட்டிபாளையம் ஊருக்குள் கடந்து செல்லும் இடத்தில், சபரி ஓடையின் இரு கரைகளிலும் தடுப்பு சுவர் கட்ட வேண்டும். தாராபுரம் ரோடு, அண்ணாமலையார் கோவில் முன்புறம் விபத்துக்கள் ஏற்படும் குறுகிய வளைவை நேர்படுத்த வேண்டும்.புதிதாக இணைக்கப்பட்ட பகுதி என்பதால் மழை நீர் வடிகால், பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும். செட்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும். அய்யம்பாளையம் பிரிவில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்றி, ரோடு விரிவுபடுத்த வேண்டும். சபரி நகர், பூங்கா நகர், செல்வலட்சுமி நகர், அபிராமி நகர், மும்மூர்த்தி நகர், பிரியங்கா அவென்யூ பகுதி ஓட்டுகள், 57வது வார்டில் இடம் பெற்றுள்ளன. இவற்றை 58வது வார்டுக்கு மாற்ற வேண்டும். தெரு நாய்கள் அதிகரித்துள்ளன. அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிைவேற்றப்பட்டன.