ஆதார் மையங்கள் 10 நாட்களாக முடக்கம்! தொழில்நுட்ப கோளாறால் மக்கள் அவதி
உடுமலை; உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, அரசு கேபிள் டிவி நிறுவன கட்டுப்பாட்டிலுள்ள ஆதார் மையங்கள், சாப்ட்வேர் கோளாறு காரணமாக கடந்த 10 நாட்களாக முடங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.தனிநபர் கைரேகை, கண் கருவிழி ஆகிய பயோமெட்ரிக் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஆதார் வழங்கப்படுகிறது.வங்கிக்கணக்கு துவங்க, ரேஷன் கார்டு பெறுவதற்கு, அரசு நலத்திட்ட உதவிகள், சலுகைகள் பெறுவது உள்பட பல்வேறு பயன்பாடுகளுக்கான பிரதான அடையாள ஆவணமாக, ஆதார் பயன்படுத்தப்படுகிறது.எல்காட் மற்றும் அரசு கேபிள் டிவி நிறுவனம் வாயிலாக, தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில், நிரந்தர ஆதார் மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.புதிய ஆதார் பதிவு, ஆதாரில் திருத்தங்கள் செய்ய, பொதுமக்கள் இம்மையங்களை பயன்படுத்துகின்றனர். அரசு கேபிள் டிவி நிறுவன கட்டுப்பாட்டில், அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், ஆதார் மையங்கள் இயங்கி வருகின்றன. அருகாமை காரணமாக, பெரும்பாலானோர், ஆதார் பதிவுக்கு, தாலுகா அலுவலக மையங்களையே நாடுகின்றனர்.இந்நிலையில், சாப்ட்வேர் கோளாறு காரணமாக, உடுமலை தாலுகா அலுவலகத்திலுள்ள இரண்டு, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள ஆதார் மையம் கடந்த 10 நாட்களாக செயல்படாமல் உள்ளது.ஒவ்வொரு மையத்துக்கும், நாளொன்றுக்கு, 40 முதல் 50 பேர் வீதம், ஆதார் பதிவு, திருத்தங்கள் செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களாக இம்மையங்கள் செயல்படாததால், பொதுமக்கள், மிகவும் சிரமப்படுகின்றனர். புதிய ஆதார் பதிவு, ஆதாரில் மொபைல் எண், முகவரி மாற்றங்களுக்காக தாலுகா அலுவலகங்களுக்கு வருவோர், மையம் செயல்படாததை அறிந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.குறிப்பாக, பயோமெட்ரிக் அப்டேட், திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ளமுடியாமல், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் தவிக்கின்றனர்.அதிகாரிகள் கூறுகையில், 'ஆதார் பதிவுக்கான அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சாப்ட்வேர், அப்டேட் செய்யப்பட்டு, புதிய வெர்ஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறால், ஆதார் பதிவு பாதிக்கப்பட்டுள்ளது. பிரச்னைகளை சரி செய்யும் பணியில், தொழில்நுட்ப குழுவினர் வேகம் காட்டிவருகின்றனர். ஓரிரு நாட்களில் ஆதார் மையங்கள் செயல்பாட்டை துவக்கும்,' என்றனர்.