உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்லுாரிதோறும் ஆதார் சிறப்பு முகாம்; அலைக்கழிப்பு தவிர்க்க யோசனை

கல்லுாரிதோறும் ஆதார் சிறப்பு முகாம்; அலைக்கழிப்பு தவிர்க்க யோசனை

திருப்பூர்; ஒவ்வொரு மக்களின் முக்கிய ஆவணமாக ஆதார் எண் மற்றும் 'பான்' எனப்படும் நிரந்தர கணக்கு எண் மாறியுள்ளது. மாணவ, மாணவியருக்கு, 'எமிஸ்' எனப்படும் கல்வித்துறையின் தனித்துவ எண் வழங்கப்படுகிறது. மாணவர் பெயர், விவரம், ஆதார் எண், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும், 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. பொதுவாக, மாணவருக்க, தனியாக வங்கி சேமிப்புக்கணக்கு இல்லாத நிலையில், கல்லுாரி படிப்புக்குள் நுழைந்தவுடன் வங்கி சேமிப்பு கணக்கு எண் அவசியமாகியிருக்கிறது. அத்துடன், ஆதார் எண்ணுடன் மாணவர்களின் 'மொபைல் போன் எண்', வங்கிக்கணக்கு மற்றும் 'பான்' எண்ணுடனும் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையும் கல்லுாரிகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு வங்கிக்கணக்கு துவக்காமல் உள்ளனர். சிறு வயதிலேயே தங்கள் குழந்தைகளுக்கு ஆதார் எண் பெற்றுள்ள நிலையில், தங்களது மொபைல் போன் எண்ணையே இணைத்துள்ளனர். இந்நிலையில், தங்கள் குழந்தைகள் கல்லுாரி படிப்புக்குள் நுழையும் நிலையில், அவர்களுக்கென தனியாக மொபைல் போன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த எண்ணை அவர்களது ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு எண்ணுடன் இணைப்பதும் அவசியமாகி விட்டது. இதற்காக, ஆதார் அட்டையில் பிழைத்திருத்தம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். அரசு மையங்கள் 'பிஸி' ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண் இணைப்பது, முகவரி மாற்றுவது, பிழைத்திருத்தம் செய்வது போன்ற பணிகளை, அரசு ஆதார் இ- சேவை மையங்கள் வாயிலாக மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற நிலையில், அரசு இ-சேவை மையங்களில், 'டோக்கன்' அடிப்படையில், இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், நாள் முழுக்க காத்திருந்தும், இப்பணிகளை செய்து முடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. சில தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தபால் நிலையங்களில் இப்பணிகளை செய்து கொள்ள முடியும் என்ற நிலையில், அங்கும் கூட்டம் வரிசை கட்டுகிறது. பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு இது, மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே, ஒவ்வொரு கல்லுாரியிலும் சிறப்பு முகாம் நடத்தினால், ஆதார் சார்ந்த அனைத்து திருத்தப்பணிகளையும் செய்து கொள்ள முடியும். இதற்கு, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டுமென பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். ஏன் கட்டாயம்?கல்லுாரி நிர்வாகத்தினர் கூறியதாவது: அரசு பள்ளிகளில் பயின்று, கல்லுாரி படிப்புக்குள் நுழையும் மாணவ, மாணவியருக்கு, 1,000 ரூபாய் நிதியுதவி அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. அதே போன்று, முதல் பட்டதாரிகளுக்கு அரசின் சார்பில் கல்விக்கட்டண சலுகை, உதவித் தொகை மற்றும் அரசுப்பணியில் முன்னுரிமை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுவதால், அரசு வழங்கும் பண பலன்கள் அனைத்தும் மாணவ, மாணவியரின் வங்கிக் கணக்கிற்கே அனுப்பப்படும். எனவே, வங்கிக்கணக்கு எண் அவசியமாகிறது; அதனுடன் ஆதார் எண் இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை