தலைமறைவு குற்றவாளி 14 ஆண்டுக்கு பின் கைது
உடுமலை : உடுமலை அருகே, மாமியாரை கொலை செய்து விட்டு, 14 ஆண்டுகள், கர்நாடக மாநிலத்தில் தலைமறைவாக இருந்த குற்ற வாளியை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள மடத்துக்குளம், வேடபட்டியை சேர்ந்த, ராஜன், அவரது மனைவி பத்மாவதி மீது சந்தேகப்பட்டு, கடந்த, 2010ம் ஆண்டு, ஜூன் 28ல், மாமியார் பாப்பம்மாளை அரிவாளால் தாக்கி கொன்றதோடு, மனைவியை தாக்கியதில் படுகாயமடைந்தார்.இது குறித்து, மடத்துக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜனை தேடி வந்தனர். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், பிடிவாரண்ட் பிறப்பித்தும், சிக்கவில்லை.எஸ்.பி., உத்தரவின் பேரில், உடுமலை டி.எஸ்.பி., ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ., கோமதி, போலீசார் மகேந்திரன், நல்லபெருமாள் கொண்ட குழுவினர், குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம், மங்களூர் பகுதியில் அபார்ட்மென்ட் வாட்ச்மேனாக பணியாற்றி, 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ராஜனை, 60, கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.