உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தாராபுரம் வழித்தடத்தில் கூடுதல் பஸ்; கிடப்பில் போடப்பட்டது கோரிக்கை

தாராபுரம் வழித்தடத்தில் கூடுதல் பஸ்; கிடப்பில் போடப்பட்டது கோரிக்கை

உடுமலை; பொள்ளாச்சியிலிருந்து பெதப்பம்பட்டி, குடிமங்கலம் வழியாக தாராபுரம் செல்லும் வழித்தடத்தில், 50க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. இவ்வழித்தடத்திலுள்ள கிராமங்களைச்சேர்ந்த மாணவர்கள், அதிகளவு தொழிற்கல்வி மற்றும் மேற்படிப்பிற்காக பொள்ளாச்சி பகுதிக்கு செல்கின்றனர்.மேலும், பல்வேறு தொழிற்சாலைகளுக்கு நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள், இவ்வழித்தடத்தில் செல்லும் பஸ்களில் பயணிக்கின்றனர். இவ்வாறு நாள்தோறும் அதிகளவு பயணியர் செல்லும், வழித்தடத்தில் போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை.காலை மற்றும் மாலை நேரத்தில், 15 நிமிட இடைவெளியில், பொள்ளாச்சி - பெதப்பம்பட்டி நகர பஸ்சும்,தாராபுரத்திற்கு செல்லும் மப்ஸல் பஸ்களும் இவ்வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.பள்ளி நாட்களில், பெதப்பம்பட்டி, ஏ.நாகூர், குடிமங்கலம் உட்பட அரசுப்பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும் மப்ஸல் பஸ்களை மட்டுமே நம்பியுள்ளதால், அப்பஸ்களில் பல மடங்கு கூட்டம் பயணிக்க வேண்டியுள்ளது.தாராபுரத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் பயணியர் எண்ணிக்கையே பஸ் முழுவதும் நிரம்பியிருக்கும் நிலையில், கிராமப்புற மாணவர்கள் படிகளில் தொங்கியபடி பயணிக்கும் அவல நிலை தொடர்கதையாக உள்ளது. தொழிற்கல்விக்காக பொள்ளாச்சிக்கு செல்லும் மாணவர்களும், போதிய பஸ்கள் இல்லாமல் வேதனைக்குள்ளாகின்றனர்.கிராமத்திலிருந்து பஸ் வசதி இல்லாமல், நாள்தோறும் பஸ் படிக்கட்டுகளில், அபாய பயணத்தை நினைத்து பல மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிடும் அவலமும் உள்ளது.எனவே பொள்ளாச்சி - தாராபுரம் வழித்தடத்தில், பள்ளி நாட்களில், பயணிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ