அ.தி.மு.க., பொதுச்செயலாளர் உற்சாகம்
திருப்பூர்; அ.தி.மு.க., பொதுச்செயலாளரின் பிரசார பயணமாக, திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் உள்ள, திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில் நேற்று, பிரசாரம் நடந்தது. மாலை, 4:00 மணி முதல், பி.என்., ரோடு, 60 அடி ரோடு பகுதிகளில், கட்சியினர் கூட்டம் கூட்டமாக வரத்துவங்கினர். பிரசாரம் நடக்க இருந்த இடத்தில், கும்மியாட்ட நிகழ்ச்சி நடந்தது. பெண்கள், புதிய சேலை அணிந்து, எவர்சில்வர் கலசத்துடன், பூர்ண கும்ப மரியாதை அளிக்க தயாராக இருந்தனர். குமார் நகர், 60 ரோடு - பி.என்., ரோடு சந்திப்பில், ரோட்டின் இருபுறமும் பச்சை பந்தல் அமைத்து, வாழைமரம், கரும்பு அதிக அளவில் வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தது. பெண்கள் புதிய சேலை அணிந்து, முளைப்பாரியுடன் காத்திருந்து, பொதுசெயலாளர் பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்த, மண்பாதை மத்தளம், நையாண்டி மத்தளம் மற்றும் கொம்பு வாத்தியம் இசைத்து, வரவேற்பு அளித்தனர். பெரும்பாலான பெண்கள், கருப்பு - வெள்ளை -சிவப்பு நிறத்தில் உள்ள பலுான்களை கையில் வைத்து, உற்சாகமூட்டினர். ஜமாப் கலைஞர்கள் இசைக்கு, அங்கிருந்த கட்சியினர் நடனமாடி மகிழ்ந்தனர். கட்சியின் இலக்கிய அணி மாநில துணை செயலாளர் மணிவண்ணன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, பகுதி செயலாளர்கள் ஹரிஹரசுதன், கருணாகரன், நாச்சிமுத்து, வேலுமணி உட்பட, கட்சியின் நிர்வாகிகள், அந்தந்த வார்டுகளில் இருந்து, மக்களை திரளாக அழைத்து வந்திருந்தனர். திருப்பூர் வடக்கு தொகுதி சார்பில், பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., விஜயகுமார் சார்பில் வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது. மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட செயலாளர் வேல்குமார் சாமிநாதன், மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், பிரசார கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில், பிரசார ஏற்பாடு மற்றும் அதிக அளவு மக்கள் கூட்டம் வந்திருந்ததால், பொதுச்செயலாளர் பழனிசாமி, உற்சாகத்துடன் பேசினார். 'போஸ்டரால்' பரபரப்பு திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள், 'அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும்' என்று போஸ்டர் ஒட்டியிருந்தனர். ஓ.பி.எஸ்., - சசிகலா, தினகரன், செங்கோட்டையன் படங்களுடன் போஸ்டர் ஒட்டியிருந்ததால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. ஆம்புலன்சுக்கு வழி கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வந்தது. இதனை பார்த்த அ.தி.மு.க. தொண்டர்கள், ஆம்புலன்சுக்கு வழி விட்டனர்.