ஆனைமலையாறு - நல்லாறு திட்டம்; வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா?
பல்லடம்; ''நான்காண்டு சாதனை என்று கூறிவரும் தி.மு.க., அரசு, ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்துக்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?'' என்று, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. பல்லடத்தில், இதன் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஈஸ்வரன், நேற்று கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின், பி.ஏ.பி., பாசன சபைகளை உருவாக்கியவர்களுக்கு சிலைகள் நிறுவியதை வரவேற்கிறோம். ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் கூறியிருக்கிறார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், முதல்வரின் அறிவிப்பு ஏதோ தேர்தல் விளம்பரத்தை போல் உள்ளது. கடந்த, 60 ஆண்டுகளுக்கும் மேலாக திட்டத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி வருகிறோம். தமிழகத்தை ஆண்ட இரு திராவிட கட்சிகளும் இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. கேரள அரசுடன் தமிழக அரசு மிகவும் நெருக்கமாக உள்ளது. ஆனால், கடுகளவும் இதற்கான முயற்சி களை மேற்கொள்ளப்படவில்லை. திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறுவது விவசாயிகளை ஏமாற்றும் செயல். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் உள்ள குளம், குட்டைகளுக்கு சரிவர தண்ணீர் வருவதில்லை. மேலும், 1,400 குளம், குட்டைகளுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்துவதுகுறித்தும் முதல்வர் பேசவில்லை. நான்கு ஆண்டு ஆட்சிக் காலத்தில், ஆனைமலையாறு, நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்ன?என்பது குறித்து, தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு, ஈஸ்வரன் கூறினார்.