உடுமலை: தொல்லியல் துறை வழிகாட்டுதலுடன், பழங்கால கோவில்களை புனரமைக்க, அனுப்பிய கருத்துரு மீது நீண்ட காலமாக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பழங்கால கோவில்களின் கும்பாபிேஷகம் கேள்விக்குறியாகியுள்ளது.உடுமலை பகுதியில், அமராவதி மற்றும் உப்பாறு ஆற்றுப்படுகைகளில், பழங்கால கோவில்கள் அதிகளவு உள்ளன. முற்காலத்தில் சிறப்பு பெற்றிருந்த கோவில்கள் பல, காலப்போக்கில், போதிய பராமரிப்பின்றி, சேதமடைந்தன.குறிப்பாக, கற்களால் கட்டப்பட்ட கோவில் சுற்றுச்சுவர்களில், மரங்கள் முளைவிட்டு, வேர்களால், இடைவெளி அதிகரித்து, சேதம் கூடுதலாகியுள்ளது.அமராவதி ஆற்றுப்படுகையான, கொழுமம், கொமரலிங்கம், கடத்துார் உட்பட பகுதிகளிலுள்ள, பல கோவில்களும், உப்பாறு படுகை எனப்படும் குடிமங்கலம் பகுதியில், சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோவில், கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் கோவில் ஆகிய கோவில்களும் போதிய பராமரிப்பின்றி, முழுமையாக புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன.சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோவில், கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் கோவில் உள்ளிட்ட 3 கோவில்களின் புனரமைப்பு பணிகளுக்காக, தொல்லியல் துறை வழிகாட்டுதல் பெற்று, ஆறு ஆண்டுகளுக்கு முன், அரசுக்கு கருத்துரு அனுப்பினர்.கல்வெட்டுகள், பழங்கால சிற்பங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், புனரமைப்பு செய்யப்படும் என்ற அறிவிப்பால், அனைத்து தரப்பினரிடத்தும் எதிர்பார்ப்பு அதிகரித்தது.ஆனாால், ஹிந்து அறநிலையத்துறை சார்பில், புனரமைப்பு பணிகளுக்காக அரசுக்கு அனுப்பிய கருத்துரு குறித்து, பல ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், கோவில்கள் பொலிவிழந்து வருகின்றன.பக்தர்கள், பரம்பரை பூஜாரிகள் சார்பில், கோவில்களில் சிறியளவிலான பராமரிப்பு பணிகளை செய்து, நிலைமையை சமாளித்து வருகின்றனர்.இருப்பினும், பழங்கால கோவில்களுக்கு கும்பாபிேஷகம் நடத்தப்படாமல், இருப்பது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.இந்தாண்டாவது பழங்கால கோவில்களை, புனரமைப்புக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.