வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விளைநிலங்கள் மனை நிலங்களாக மாற்றப்படும் போதே எதிர்ப்பு காட்டி இருந்தால் இந்த பிரச்னை வந்து இருக்காது.
பல்லடம்: பல்லடம் அருகே, இடுவாய் ஊராட்சிக்கு உட்பட்டது சின்னக்காளிபாளையம் கிராமம். இங்குள்ள திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான, 9 ஏக்கர் நிலத்தில், மாநகரில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கான முன்னேற்பாடுகள் நேற்று துவங்கின. தகவல் அறிந்த இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பணிகளைத் தடுத்து நிறுத்தினர். பொதுமக்கள் கூறியதாவது: திருப்பூர் மார்க்கெட்டிற்கு அதிகப்படியான விளைபொருட்கள் இங்கிருந்துதான் செல்கின்றன. விவசாயம் நிறைந்த இப்பகுதியை மாநகராட்சி அழிக்க நினைக்கிறது. நாங்கள் அரசுக்கோ, மாநகராட்சிக்கோ எதிரானவர்கள் அல்ல. ஊரைக் காப்பாற்ற எங்கள் உயிரையும் தர தயாராக உள்ளோம். எக்காரணம் கொண்டும் பணிகள் மேற்கொள்ள விடமாட்டோம். கோர்ட் மூலம் நிச்சயம் தடை உத்தரவு பெறுவோம். அதுவரை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாநகராட்சி அதிகாரிகள், ''கோர்ட் உத்தரவு பெற்று, விதிமுறைகளை பின்பற்றி தான் ஆரம்பகட்ட பணிகளை மேற்கொள்கிறோம். உங்களுக்கு ஆட்சேபம் என்றால் கோர்ட்டை நாடுங்கள். பணிகளை தடுத்து நிறுத்த முடியாது'' என திட்டவட்டமாக கூறினர். மக்கள் எதிர்ப்பை மீறி பணிகள் துவங்கின. அங்கிருந்த மரங்களும் வெட்டப்பட்டன. இதை எதிர்த்த பொதுமக்கள், 'ஒரு மரத்தை வெட்டினால் 20 மரக்கன்றுகள் நட வேண்டும் என்று அரசு கூறியுள்ளது'' என்றனர். இருப்பினும் எதிர்ப்பை மீறி, மரங்கள் வெட்டப்பட்டன. பணிகளை தடுக்க முயன்ற, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உள்பட 30க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கி வேனில் ஏற்றி கைது செய்தனர்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செயல் தலைவர் வெற்றி கூறியதாவது: இடுவாய் ஊராட்சி, சின்னக்காளிபாளையம் கிராமத்தில், மாநகராட்சியின் குப்பைகள், கழிவுகள் கொட்டுவதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வந்த வாகனங்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிறை பிடித்தனர். எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் போலீசாரின் அடக்கு முறையுடன் கைது செய்யப்பட்டனர். கிராம மக்கள் மீதும், விவசாயிகள் மீதும் சிறிதும் அக்கறையின்றி செயல்படும் அரசு நிர்வாகத்தை கண்டிக்கிறோம். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்வதுடன், கிராமங்களில் மாநகராட்சி கழிவுகள் கொட்டுவதை, மாநகராட்சி நிர்வாகம் நிறுத்திக் கொள்ள வேண்டும். இடுவாய் கிராமத்தில் இன்று கடையடைப்பு: கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது: இடுவாய் கிராமத்தில் இன்று கடையடைப்பு இடுவாய் ஊராட்சி பகுதிகளில், குப்பைகள், கழிவுகளை கொட்டக்கூடாது என, கிராம சபா கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை மறைத்து, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் கோர்ட்டில் அனுமதி பெற்றுள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசார், மாநகராட்சிக்கு உறுதுணையாக அராஜகத்தை கையாண்டுள்ளனர். மாநகராட்சி மற்றும் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து, இன்று(25ம் தேதி) இடுவாய் ஊராட்சி முழுவதும் கடையடைப்பு நடத்த வியாபாரிகள், பொதுமக்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விளைநிலங்கள் மனை நிலங்களாக மாற்றப்படும் போதே எதிர்ப்பு காட்டி இருந்தால் இந்த பிரச்னை வந்து இருக்காது.