இ-நாம் திட்டத்தில் ஏலம்; கொப்பரைக்கு கூடுதல் விலை
உடுமலை; மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ், தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடந்தது. மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில், தேங்காய் ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு, 14 விவசாயிகள், 946 கிலோ எடையுள்ள, 3,200 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இ-நாம் திட்டத்தின் கீழ் நடந்த ஏலத்தில், ஆறு வியாபாரிகள் பங்கேற்றனர். அதிகபட்சமாக, கிலோ ரூ. 62.15 க்கும் ,குறைந்த பட்ச விலையாக ரூ.50 என, சராசரியாக, ரூ.60க்கு விற்பனையானது. நேற்று நடந்த ஏலத்தில், 56 ஆயிரத்து, 530 ரூபாய்க்கு வணிகம் நடந்தது. அதே போல், கொப்பரை ஏலம் நடந்தது. இதற்கு, 4 மூட்டை அளவுள்ள, 75 கிலோ கொப்பரை, 4 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இ-நாம் ஏலத்தில், அதிக பட்சமாக, ஒரு கிலோ ரூ. 240க்கும், குறைந்தபட்ச விலையாக, ரூ. 183.10 என சராசரியாக, ரூ. 225க்கும் என, 16 ஆயிரத்து, 830 ரூபாய்க்கு கொப்பரை விற்பனை நடந்தது. வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடக்கும் கொப்பரை, உரித்த தேங்காய் ஏலத்தில் விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்று பயன்பெறலாம் என திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் சண்முக சுந்தரம், கண்காணிப்பாளர் மேரிஹில்டா தெரிவித்துள்ளனர்.