மேலும் செய்திகள்
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்!
27-Jul-2025
கோவையின் அடையாளங்களில் ஒன்று, ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மற்றும் அவிநாசிலிங்கம் மனையியல் பல்கலைக்கழகம். இதை உருவாக்கியவர் அவிநாசிலிங்கம் செட்டியார். 1946ல் சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினர்; மாகாண அமைச்சரவையில் கல்வியமைச்சர்; 1946ல், தமிழ் வளர்ச்சி கழகத்தை உருவாக்கியவர்; 1952ல், திருப்பூர் எம்.பி.,; 1958 முதல், 1964 வரை மாநிலங்களவை உறுப்பினர் என பல பொறுப்புகளை வகித்தவர். இவரது சேவைக்காக, 1970ல், இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
சிறைக்கூடத்தில்...
சமூக சீர்திருத்தவாதி, சமூக சேவகர், விடுதலை போராட்ட வீரர், தமிழ் வளர்ச்சிக்கு தொண்டாற்றியவர், சிறந்த அரசியல்வாதி, தலைசிறந்த கல்வியாளர் என பன்முக திறமை கொண்ட அவரின் விடுதலைப் போர் பங்களிப்பு குறித்து, அவரது மகன் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது: பல்வேறு சுதந்திர போராட்டங்களில் தன்னை இணைத்து, 1930, 1932, 1941 மற்றும், 1942 ஆகிய ஆண்டுகளில் சிறைசென்றார். சுதந்திரத்துக்காக சிறை வாழ்க்கை அனுபவிப்பது, மிகக் கடினமானது; மிகச்சிறிய எட்டுக்கு எட்டு அறை; கும்மிருட்டு என, உடல், மனதை வேதனைப்படுத்தும் அனுபவம் தான் கிடைக்கும். ஆனால், விடுதலைப் போரில் சிறை செல்வது என்பது, சமுதாயத்தின் விழிப்புணர்வு மற்றும் மாற்றத்திற்கான தேவையாக கருதினார். தெம்பு தந்த பாரதி பாடல்
திருக்குறள், கம்பராமாயாணம், ராமகிருஷ்ண பரம ஹம்சர், விவேகானந்தரின் புத்தகங்களை படித்தார். சிறைச் சாலைக்குள், ராஜாஜி, டி.பிரகாசம், வைத்தியநாத அய்யர், ராமசாமி ரெட்டியார் போன்ற தலைவர்களுடன் பழகும் வாய்ப்பு பெற்றார்.எப்போதெல்லாம் உடலும், மனமும் சோர்வடைகிறதோ, அப்போதெல்லாம் பாரதியின் பாடல்களை பாடி உற்சாகம் அடைவார். சிறைச்சாலைக்குள் மாதம் ஒரு கடிதம் எழுதவும், கடிதம் பெறவும் அனுமதியுண்டு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கடந்த, 1930ல் அவர் உருவாக்கிய ராமகிருஷ்ண வித்யாலயம், கோவையில் வளர்வதற்கு பயன்படுத்திக் கொண்டார். காந்தி பகிர்ந்த கருத்து
மகாத்மா காந்தி தமிழகம் வரும்போது, அவருடன் பலமுறை பயணித்துள்ளார். காந்தியடிகள், எவ்வளவு நேரம் கழித்து உறங்கினாலும், அதிகாலை, 4:00 மணிக்கு எழுந்து விடுவார்; அதிகாலை, 4:00 மற்றும், 5:00 மணிக்கு அவரது பிரார்த்தனை தவறாமல் இருக்கும். கடந்த, 1934, பிப்., 6ம் தேதி, அவிநாசிலிங்கம் அய்யாவிடம், எனது இறப்பு சாதாரணமான, அமைதியான இறப்பாக இருக்காது; துாக்கில் அல்லது, துப்பாக்கி தோட்டாவினால் தான் இருக்கும்' என கூறியுள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.---படக்குறிப்பு:கடந்த, 1934, ஜூலை 20ல், மகாத்மா காந்தியடிகள் கைப்பட, அவிநாசி லிங்கம் செட்டியாருக்கு எழுதிய கடிதம். சுதந்திர வேட்கைக்கான உத்வேகம் நம் நாட்டில், 1930 மார்ச் 12 துவங்கி, ஏப்., 6 வரை உப்பு சத்தியாகிரகம் நடந்தது. இதை அடக்க, மகாத்மா காந்தியை கைது செய்வது மட்டும் தான் ஒரே வழி என ஆங்கிலேயர்கள் நினைத்தனர். ஆனால், காந்தியை கைது செய்வது, அவ்வளது எளிதானது அல்ல என்பதால், இதை தந்திரத்துடன் கையாண்டனர். அந்தாண்டு மே 4ம் தேதி இரவு, சூரத் மாவட்ட நீதிபதி, இரு போலீஸ் அதிகாரிகள் மற்றும் 30 போலீசார் அடங்கிய குழு, காந்தியடிகள் தங்கியிருந்த காரடி கேம்ப்புக்குள் நுழைந்து, அவரை கைது செய்தது. இது நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காந்தி சிறைக்கு சென்ற பின், உப்பு சத்தியாகிரத்தை குஜராத் முன்னாள் நீதிபதி அப்பாஸ் டியாப்ஜி, சரோஜினி நாயுடு ஆகியோர் வழிநடத்தினர்.இந்த செய்தியை, அவிநாசிலிங்கம் செட்டியார் ஊட்டியில் உள்ள ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் தங்கியிருந்த போது, செய்தித்தாளில் படித்தார். இந்த செய்தி தான், அவரது மனதில் சுதந்திர வேட்டையை வேரூன்றச் செய்தது. கோவை விரைந்த அவர், காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். - மீனாட்சி சுந்தரம், அவிநாசிலிங்கம் செட்டியாரின் மகன்.
27-Jul-2025