ரசாயன பூச்சிக்கொல்லிகளை தவிருங்க: தோட்டக்கலைத்துறையினர் அறிவுரை
உடுமலை,: வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதால், இயற்கை எதிர் உயிர் பூச்சிகள் அழிந்து விடும்; எனவே, அவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்,' என ஆழியார் நகர் தென்னை ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை இணை பேராசிரியர் அருள் பிரகாஷ் பேசினார்.உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம், ஆர்.வேலுார் கிராமத்தில் நடந்தது.ஆழியார் நகர் தென்னை ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை இணை பேராசிரியர் அருள் பிரகாஷ் தென்னந்தோப்புகளை பார்வையிட்டு, வெள்ளை ஈ கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினார்.அவர் பேசியதாவது: தென்னை மரங்களில், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மற்றும் 'பொந்தாஸ்' வெள்ளை ஈ தாக்குதல் காணப்படுகிறது.நெட்டை ரகங்களில் குறைவாகவும், ஒட்டு ரகங்களில் தாக்குதல் அதிகமாகவும் காணப்படுகிறது. கட்டுப்படுத்தும் முறைகள்
விளக்கு பொறியை, ஏக்கருக்கு இரண்டு வீதம் இரவில், ஏழு மணி முதல் 11 மணி வரை வைத்து வெள்ளை ஈக்களை கண்காணித்தும் கவர்ந்தும் அழிக்கலாம்.மஞ்சள் நிற ஒட்டும் பொறிகள் ஏக்கருக்கு, 10 வீதம் ஆறடி உயரத்தில் தொங்கவிட்டு ஈக்களின் நடமாட்டத்தை கண்காணித்தும் கவர்ந்தும் அழிக்கலாம். விசைத்தெளிப்பானால், மிக வேகமாக தண்ணீரை பீச்சியடிப்பதால், ஈக்களின் எண்ணிக்கை பெருகுவதை குறைக்கலாம்.'என்கார்சியா' ஒட்டுண்ணி குளவியை ஏக்கருக்கு, 10 இலை துண்டுகள் வீதம் தாக்கப்பட்ட ஓலைகளின் மீது வைத்தும் கட்டுப்படுத்தலாம். கண்ணாடி இறக்கை பூச்சி இரை விளங்கி முட்டைகளை ஏக்கருக்கு, 400 வீதம் தாக்கப்பட்ட மரங்களில் வைத்தும் கட்டுப்படுத்தலாம்.கரும்பூசணத்தை கட்டுப்படுத்த, மைதா மாவு பசை கரைசலை ஒரு லிட்டர் தண்ணீரில், 25 கிராம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். ரசாயன பூச்சிக்கொல்லிகள் இயற்கை எதிர் உயிர் பூச்சிகளை அழித்து விடுவதால் அவற்றை பயன்படுத்தக்கூடாது.ஒட்டு ரகங்களில் அதிக தாக்குதல் தென்படுவதால், வேப்பெண்ணெய் ஒரு லிட்டருக்கு 5 மில்லி லிட்டர், காதி சோப் 5 கிராம் மற்றும் ஒட்டும் திரவம் ஒரு மில்லி லிட்டர் கலந்து, மரத்துக்கு 10 முதல் 12 லிட்டர் வீதம் தெளித்துவிட்டு, அதன் பின்னர் 21 நாட்கள் கழித்து தண்ணீர் தெளித்துவிட்டு பின்னர் ஒட்டுண்ணி கட்ட வேண்டும்.அப்பொழுதுதான் கட்டுப்பாடு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, அவர் பேசினார். கூட்டத்தில்,தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் கலாமணி, மோகனரம்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.