கொத்தடிமை முறைக்கு எதிராக விழிப்புணர்வு
திருப்பூர்; கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, தொழிலாளர் துறை சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், அரசுத்துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களிலும், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.மக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால், நேற்று கையெழுத்து இயக்கம் நடந்தது. தொழிலாளர் துறை உதவி கமிஷனர்(அமலாக்கம்) ஜெயக்குமார், துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மக்களிடையே வினியோகித்தார்.உதவி கமிஷனர் கூறுகையில், 'வரும் 2030ம் ஆண்டுக்குள், கொத்தடிமை தொழிலாளர் இல்லா தமிழகத்தை உருவாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இலக்கை அடைந்திட, அனைவரும் அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.