குழந்தை திருமணத்தால் பாதிப்பு மாணவர்களுக்கு விழிப்புணர்வு
உடுமலை: சமூக நலத்துறையின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து, விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.பள்ளி மாணவர்கள், பல்வேறு சூழ்நிலைகளால் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுவது, மனநிலை மாற்றத்தால் தவறான வழிகளுக்கு தள்ளப்படுவது, குழந்தை திருமணம் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீவிர விழிப்புணர்வு தேவையாக உள்ளது.இதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் சார்பில், ஒன்ஸ் ஸ்டாப் அமைப்பின் வாயிலாக, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாகன விழிப்புணர்வு துவக்கப்பட்டுள்ளது.இரண்டு நாட்களாக, உடுமலை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வாகனத்தின் வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஒன்ஸ் ஸ்டாப் அமைப்பின் அலுவலர்கள் கூறியதாவது: திருப்பூர் மாவட்ட அளவில், ஒன்றியம் வாரியாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், வளர் இளம் பருவ மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஒன்ஸ் ஸ்டாப் பணியாளர்கள், ஒன்றியத்தில் உள்ள சமூக நலத்துறை சார்ந்த அலுவலர்கள் விழிப்புணர்வு வழங்குகின்றனர்.குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள், போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.இவ்வாறு, தெரிவித்தனர்.