வாழையை தாக்கும் சருகு நோய்: விவசாயிகள் அதிர்ச்சி
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் வாழையில் சருகு நோய் வேகமாக பரவி வருகிறது. 'இக்கால கட்டத்தில் சருகு நோய் பரவ வாய்ப்பில்லை' என்ற போதிலும், வழக்கத்துக்கு மாறான நோய் தாக்குதல், விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, பல்லடம், பொங்கலுார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வாழையில், சருகு நோய் தாக்குதல் அதிகளவில் தென்பட துவங்கியிருக்கிறது. வாழை மரங்களின் இலை மஞ்சளாகி, அதன் ஓரங்கள் காய்ந்து விடுகின்றன. மரத்தின் அடி இலைகள் உடைந்து தொங்குகின்றன. நோய் தாக்குதலால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து, அவிநாசி வட்டாரித்தில், வாழை பயிரிட்ட விவசாயிகள் கூறுகையில், 'பொதுவாக, வாழை அறுவடை சமயத்தில் தான், அதாவது, 9 மற்றும், 10வது மாதத்தில் தான் சருகு நோய் தென்படும். நோய் முற்றுவதற்குள் அறுவடை முடிந்து விடும். ஆனால், தற்போது வாழை நடவு செய்த, 2 மாதத்தில் இருந்து, அறுவடைக்கு தயாரான நிலை வரை சருகு நோய் தாக்குதல் தென்படுகிறது. இது, வழக்கத்துக்கு மாறானது; இதற்கான காரணம் தெரியவில்லை. அதிகளவில் மருந்து தெளித்தாலும், நோயை கட்டுப்படுத்த முடிவதில்லை,' என்றார்.தோட்டக்கலைத் துறையினர் கூறுகையில் ,'விவசாயிகள், வாழைக்கு அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க மாட்டார்கள். ஆனால், சருகு நோய் தாக்குதால், 4, 5 முறை மருந்து தெளிக்கின்றனர். இதனால், அவர்களுக்கு பராமரிப்பு செலவு அதிகரிப்பதுடன், அறுவடை செய்யப்படும் வாழைக்காயிலும் ரசாயன மருந்தின் தாக்கம் அதிகளவில் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. களப்பரிசோதனையில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது' என்றனர்.
களமிறங்குவார்களா?
பயிரில் நோய் தாக்குதல் உள்ளிட்ட அசாதரண சூழலில் விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கவும், நோய்க்கான காரணத்தை அறிந்து, அதற்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கவும் தான், வட்டார அளவில் வேளாண் விஞ்ஞானிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்பாரா விதமாக, வழக்கத்துக்கு மாறாக வாழையை, சருகுநோய் தாக்கியுள்ள நிலையில், வேளாண் விஞ்ஞானிகள் களமிறங்கி, தீர்வு காண வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.