பண்டிகை கால பணத்தேவை தயார் நிலையில் வங்கிகள்
திருப்பூர் : பண்டிகை கால பண தேவையை பூர்த்தி செய்ய, திருப்பூர் பகுதி வங்கிகள் தயாராக உள்ளன. தட்டுப்பாடு ஏற்படாதவகையில், ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்களுக்கு சம்பளம், போனஸ் ஆகியவை, தொழிலாளர் வங்கி கணக்கிலேயே சேர்க்கப்பட்டு வருகிறது.க்யூ.ஆர்., ஸ்கேனிங் மூலம் சுலபமாக பணம் செலுத்தி, பொருட்களை வாங்க முடியும். ஆனாலும், போனஸ் தொகையை ஏ.டி.எம்.,ல் இருந்து எடுத்து, வீட்டில் ஓரிரு நாட்கள் வைப்பது; பணத்தை கைகளால் தொட்டுப் பார்த்துசெலவு செய்வதை பலரும் மகிழ்ச்சியாக கருதுகின்றனர்.தீபாவளியையொட்டி திருப்பூரில் பண புழக்கம் மற்றும் பண தேவை அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை இருந்தாலும் கூட, வழக்கத்தைவிட அதிக தொகை ஏ.டி.எம்.,ல் இருந்து பெறப்பட வாய்ப்பு உள்ளது.மக்களின் பண்டிகை கால பண தேவையை பூர்த்தி செய்ய வங்கிகளும் தயார் நிலையில் உள்ளன. 'வங்கிகள் தங்கள்ஏ.டி.எம்., மையங்களை தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். பழுதடைந்த மையங்களை சரி செய்யவேண்டும். ஏ.டி.எம்., மையங்களை கண்காணித்து, தட்டுப்பாடு ஏற்படாதவகையில், பணம் தீர்ந்த உடன் நிரப்ப வேண்டும்.வங்கியில் பணம் பெற வருவோருக்கும் தட்டுப்பாடு இன்றி தொகை கிடைக்கச் செய்யவேண்டும்,' என, மாவட்ட நிர்வாகம், முன்னோடி வங்கி வாயிலாக, வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.ஏ.டி.எம்., பாதுகாப்பு அவசியம்''ஏ.டி.எம்., மையங்களை உடைத்து, பணம் திருடும் கொள்ளையர்களும் உள்ளனர். வங்கிகள், தங்கள் ஏ.டி.எம்., மையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.அனைத்து ஏ.டி.எம்., மையங்களிலும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும்; தேவைப்பட்டால் கூடுதல் கேமரா, மின் விளக்குகள் பொருத்தவேண்டும். கேமராக்கள் முழு இயக்கத்தில் உள்ளனவா என சரிபார்க்கவேண்டும். செக்யூரிட்டி நியமிக்க வேண்டும். சில ஏ.டி.எம்., மையங்களில் கதவுகள் பழுதடைந்து, சரிவர மூடப்படாத நிலையில் உள்ளன; பழுதடைந்த கதவுகளை சரி செய்ய வேண்டும்'' என போலீசாரும் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.