பி.ஏ.பி., 3ம் மண்டலம் இரண்டாம் சுற்றுக்கு இழுபறியாகும் நீர்திறப்பு! பயிர்கள் காய்வதால் விவசாயிகள் வேதனை
உடுமலை : பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்தில், இரண்டாம் சுற்றுக்கு நீர் திறப்பது இழுபறியாகியும், நிலைப்பயிர்கள் காய்ந்தும் வருவதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து, சுழற்சி முறையில் நீர் வழங்கப்படுகிறது.இதன் அடிப்படையில், பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்தின் கீழ் பயன்பெறும், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 94 ஆயிரத்து, 362 ஏக்கர் நிலங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, கடந்த ஜன., 29ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.இப்பாசன நிலங்களுக்கு, வரும் ஜூன் 13 வரை, 135 நாட்களில், உரிய இடைவெளிவிட்டு, ஐந்து சுற்றுக்களில், 10 ஆயிரத்து, 300 கன அடி நீர் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது.தண்ணீர் திறப்பை தொடர்ந்து, பாசன பகுதிகளில், மக்காச்சோளம், தானியங்கள் மற்றும் காய்கறி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்தனர்.கடந்த, 2ம் மண்டல பாசனத்திற்கு, பருவ மழைகள் அதிகரிப்பு, பாசன பகுதிகளிலும் மழை பெய்து வந்ததால், முதல் இரண்டு சுற்றுக்கள் தொடர்ந்தும், கடைசி மூன்று சுற்றுக்கள் தொடர்ச்சியாகவும் நீர் வழங்கப்பட்டது.ஆனால், மூன்றாம் சுற்றுக்கு, வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, நீர் இழப்பு, மழை இல்லாதது ஆகிய காரணங்களினால், திருமூர்த்தி அணை நீர்மட்டம் வேகமாக சரிந்தது.இதனால், முதல் சுற்றுக்கு இடைவெளி விடப்படும் என தெரிவிக்கப்பட்டு, கடந்த பிப்., 24ல் முதல் சுற்று நிறைவு செய்யப்பட்டது. திருமூர்த்தி அணையில் நீர் சேகரிக்கப்பட்டு, ஒரு வாரத்தில், இரண்டாம் சுற்றுக்கு நீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனால், திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து பரம்பிக்குளம் அணை வந்து, சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில், மின் உற்பத்தி செய்த பிறகு காண்டூர் கால்வாய் வழியாக நீர் கொண்டு வந்து, திருமூர்த்தி அணையில் சேகரிக்கப்பட்டு, அதன் பின் பிரதான கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீர் திறக்கப்படும்.இதற்காக காண்டூர் கால்வாயில் கடந்த, பிப்., 21ல் நீர் நிறுத்தப்பட்டது. சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில், பல ஆண்டுகளாக இயங்கி வந்த மின் உற்பத்தி கட்டமைப்பு பழுதடைந்து, அதனை சரி செய்யும் பணி நடந்து வருகிறது.இதனால், காண்டூர் கால்வாயில் நீர் எடுக்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது. பைபாஸ் வழியாக, வினாடிக்கு, 400 கன அடி வரை மட்டுமே நீர் எடுக்கப்படுவதால், திருமூர்த்தி அணை நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பி.ஏ.பி., 3ம் மண்டலம், இரண்டாம் சுற்றுக்கு நீர் திறப்பது, இழுபறியாகி வருவதால், நிலைப்பயிர்களுக்கு உரிய நீர் கிடைக்காமல் காய்ந்து வருகிறது. விரைந்து பணி முடிக்கணும்
விவசாயிகள் கூறுகையில், 'பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டதால், மக்காச்சோளம், தானிய பயிர்கள், காய்கறி உள்ளிட்ட பல்வேறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ள நிலையில், சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் காய்ந்து வருகிறது. அதே போல், நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்திற்கு சென்றுள்ள நிலையில், பயிர்களுக்கு நீர் வழங்க முடியாமல், கண்ணீர் விட வேண்டியுள்ளது.அதிலும், முதல் 'ஷிப்ட்' நீர் எடுத்த மடைகளுக்கு ஒரு மாதம் வரை நீர் இல்லாமல், பயிர்கள் முழுவதுமாக காய்ந்துள்ளது. எனவே, பராமரிப்பு பணிகளை விரைவில் முடித்து, இரண்டாம் சுற்றுக்கு நீர் திறக்க வேண்டும், என்றனர். திறப்பது எப்போது?
அதிகாரிகள் கூறுகையில், 'சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில், ஓரிரு நாட்களில் பணி முடிப்பதாக தெரிவித்துள்ளனர். தற்போது, பைபாஸ் வழியாக நீர் எடுத்தாலும் பயனில்லை. சர்க்கார்பதி பணி முடித்ததும், முழுமையான கொள்ளளவு நீர் எடுத்தால், திருமூர்த்தி அணையில் நீர், 50 அடியாக உயர்ந்ததும், வரும், 14ம் தேதி முதல், இரண்டாம் சுற்றுக்கு நீர் திறக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.