படித்துறைக்கு செல்ல தடைகள் ஏராளம்: பக்தர்கள் அதிருப்தி
உடுமலை; பழமை வாய்ந்த கோவில்களின் அருகில், அமராவதி ஆற்றங்கரையில், நீராடவும், திதி கொடுத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் இருப்பதால், பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர்.மடத்துக்குளம் தாலுகா, அமராவதி ஆற்றங்கரையில், பழமை வாய்ந்த சிவாலயங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக, சுற்றுக்கோவில் எனப்படும் குமரலிங்கம் காசி விஸ்வநாதர், கொழுமம் தாண்டேஸ்வரர் கோவில்கள் பிரசித்தி பெற்றதாகும்.முக்கிய விசேஷ நாட்களில் இக்கோவில்களுக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டி, ஆடி அமாவாசை உள்ளிட்ட நாட்களில், முன்னோர்களுக்கு திதி கொடுக்க பக்தர்கள் திரளாக வருகின்றனர். ஆனால், அப்பகுதியில், போதிய வசதியில்லாமல், பக்தர்கள் பாதிக்கின்றனர்.ஹிந்து அறநிலையத்துறை சார்பில், கோவில் அருகில் இருந்து, குறிப்பிட்ட துாரத்துக்கு படித்துறை கட்டப்பட்டுள்ளது.இந்த படிகளில் அமர்ந்தே திதி கொடுக்கும் நிலை உள்ளது. மேலும், படித்துறைக்கும், ஆற்றுக்கும் உள்ள இடைவெளி, சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால், பக்தர்கள் நீராடவும், அப்பகுதிக்கு சென்று வரவும் சிரமப்படுகின்றனர்.அதிக கூட்டம் வரும் போது, படித்துறையில் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, ஹிந்து அறநிலையத்துறை சார்பில், திதி கொடுப்பதற்கு தனியாக இடம் ஒதுக்கி, கட்டட வசதியை ஏற்படுத்த வேண்டும்.பக்தர்கள் பாதுகாப்பாக ஆற்றங்கரைக்கு செல்ல, கான்கிரீட் கரை அமைக்க வேண்டும். இதே போல், கொழுமம் தாண்டேஸ்வரர் கோவிலில் இருந்து, ஆற்றங்கரைக்கு செல்வதற்கான வழித்தடம், மோசமான நிலையில் உள்ளது.அங்கும் படித்துறை ஏற்படுத்துவது அவசியமாகும். அப்பகுதியில், ஆற்றங்கரையொட்டி, புதர் மண்டிய பகுதியில், மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களும் அதிகரித்துள்ளது. காலி மதுபாட்டில்களை படித்துறை செல்லும் வழியிலும் வீசிச்செல்கின்றனர்.இதனால், பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர். இப்பிரச்னைகள் குறித்து, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.