உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பயோசார் வினியோகம் துவக்கம்

பயோசார் வினியோகம் துவக்கம்

பல்லடம்; ஒவ்வொரு மாதமும், ஆயிரம் கிலோ உற்பத்தி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பல்லடத்தில், 'பயோசார்' விநியோகிக்கும் பணி நேற்று துவங்கியது. வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கில், 'பயோசார்' தயாரிக்கும் திட்டத்தை பல்லடம் உலகத் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் முதன் முறையாக துவங்கியது. குறைந்த தண்ணீர் பயன்பாட்டுடன், இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து, விவசாயிகளுக்கு, உற்பத்தி மற்றும் வருமானத்தை பெருக்க 'பயோசார்' உதவுகிறது. மாட்டுச்சாணம், கோமியம், விவசாய கழிவுப்பொருட்கள் ஆகியவற்றுடன் கரி துண்டுகளை சேர்த்து, வலுவூட்டி குறிப்பிட்ட சதவீதத்தில் கலந்து, 'பயோசார்' தயாரிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் இருந்து வீணாகும் கரித்துண்டுகள் 'பயோசார்' உற்பத்திக்கு பெரிதும் பயன்படுகின்றன. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, பயோசார் உற்பத்தி சமீபத்தில் துவங்கியது. மாதம், 1,000 கிலோ உற்பத்தி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு வழங்குவதன் வாயிலாக, வேளாண் உற்பத்தியை மேம்படுத்தி, விவசாயிகளின் வருமானத்தை பெருக்க முடியும் என, உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார். 'பயோசார்' தயாரிக்கப்பட்டு முதல் விற்பனை நேற்று நடந்தது. நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியம் விற்பனையை துவக்கி வைக்க, கேத்தனுார் இயற்கை விவசாயி பழனிசாமி மற்றும் ஹார்ட்புல்னஸ் ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன் ஆகியோர் பெற்று கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை