சாய ஆலை சங்கத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருப்பூர்; திருப்பூரில், சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்துக்கு, அடுத்தடுத்து நான்கு வெடி குண்டு வெடிக்க உள்ளதாக இ-மெயில் மூலமாக மிரட்டல் விடப்பட்டது. தமிழகம் முழுதும் சமீபத்தில் கலெக்டர் அலுவலகம், கோர்ட், மாநகராட்சி அலுவலகம் என, அரசு துறை அலுவலகங்களுக்கு இ-மெயில் மூலமாக வெடி குண்டு மிரட்டல் விடுப்பது நடந்து வருகிறது. மிரட்டலில் ஈடுபடும் நபர்கள், ரஷ்யா போன்ற வெளிநாட்டில் உள்ள மெயில் சர்வரில் இருந்து தகவல் அனுப்பி வருவது தெரிய வந்தது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர், ராயபுரத்தில் உள்ள சாய ஆலை உரிமையாளர்கள் சங்க அலுவலக இ-மெயிலுக்கு, அடுத்தடுத்து, நான்கு வெடி குண்டுகள் வெடிக்க உள்ளதாக தகவல் அனுப்பினர். இதனை அறிந்து ஊழியர்கள் அச்சமடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு, செயலிழப்பு பிரிவு போலீசார் அலுவலகம் முழுதும் சோதனை செய்தனர். எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது வழக்கம் போல புரளி என தெரிய வந்தது. தொடர்ந்து, இது போன்ற செயலில் ஈடுபட்டு வரும் நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.