உடைந்த சிலாப் சீரமைக்க பா.ஜ., வேண்டுகோள்
திருப்பூர்; பூச்சக்காடு பகுதியில் வடிகால் சிலாப் உடைந்து பெரும் அவதியை ஏற்படுத்துவதாக உள்ளது. இதை சரி செய்ய பா.ஜ.,வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பூச்சக்காடு பகுதி குடியிருப்புகளும், வாகனப் போக்குவரத்தும் நிறைந்த பகுதி. இங்கு, 43 வது வார்டுக்கு உட்பட்ட கிரி நகர், பூச்சக்காடு 2 வது வீதியை இணைக்கும் வகையில் ரோடு உள்ளது.இந்த ரோடு இணையும் இடத்தில் மழை நீர் வடிகால் ரோட்டின் குறுக்கில் உள்ளது. இந்த வடிகாலின் மையப் பகுதியில் உள்ள 'கான்கிரீட் சிலாப்' உடைந்து பல நாட்களாகிறது. மையப்பகுதியில் உள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு இது தெரிவதில்லை.ரோட்டில் வந்து திரும்பும் வாகனங்கள் இக்குழியில் இறங்கி விடுவது அடிக்கடி நடக்கிறது. மேலும், இரு சக்கர வாகனங்களில் வருவோர் விழுந்து காயமடைகின்றனர். தெரு விளக்கும் எரியாமல் உள்ளதால், விபத்துகள் அடிக்கடி நடக்கிறது.இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, கருவம்பாளையம் மண்டல பா.ஜ., தலைவர் சங்கர், மாவட்ட துணை தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் கட்சியினர் அங்கு திரண்டனர்.அப்போது, பா.ஜ., வினர் கூறுகையில், 'திருப்பூர் மாநகராட்சி, 42 மற்றும் 43 ஆகிய இரு வார்டுகளின் எல்லையாக இப்பகுதி அமைந்துள்ளது. இரு கவுன்சிலர்களிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. தினமும் விபத்துகள் நடக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் இந்த இடத்தில் கட்சிக் கொடியை நட்டி வைத்துள்ளோம்,' என்றனர்.