உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழில் வளர்ச்சிக்கு உதவும் பட்ஜெட் சிறப்பு: பின்னலாடை துறையினர் வரவேற்பு

தொழில் வளர்ச்சிக்கு உதவும் பட்ஜெட் சிறப்பு: பின்னலாடை துறையினர் வரவேற்பு

திருப்பூர்: ''மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சலுகை அறிவிப்புகளால், தொழில் வளர்ச்சி மேம்படும்; வருமான வரிச்சலுகையால், மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். இருப்பினும், வங்கதேச ஆடை இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்காதது, ஏமாற்றமாக இருக்கிறது'' என்று திருப்பூர் தொழில்துறையினர் தெரிவித்தனர்.

பின்னலாடை வாரியம் வேண்டும்

முத்துரத்தினம், தலைவர், திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா):ஐந்து லட்சம் தொழில்முனைவோரை உருவாக்கும் திட்டம், பிணையற்ற கடன் திட்ட உச்சவரம்பு உயர்வு, ஜவுளி தொழிலுக்கு இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பருத்தி இறக்குமதி வரியை நீக்கியிருக்கலாம்.வளர்ந்த நகரங்களில், 'மினி ஏர்போர்ட்', புற்றுநோய் மருத்துவமனை அறிவிப்பை வரவேற்கிறோம். நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. வங்கதேச ஆடை இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்காதது ஏமாற்றமாக இருக்கிறது. பின்னலாடை வாரியம் குறித்த அறிவிப்பு இல்லை; அனைத்து தொழில்துறையினர் இணைந்து மத்திய அரசிடம் எடுத்துரைக்க வேண்டும்.

குறு, சிறு நிறுவனம் அதிகரிக்கும்

காந்திராஜன், தலைவர், திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம்:பட்ஜெட்டில், மாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது; வருமானவரி செலுத்துவதில் சலுகை அளித்துள்ளனர். மக்களிடையே வாங்கும் திறன் அதிகரிக்கும்; விற்பனை உயரும். அரசுக்கு மறைமுக வரி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.கடன் உத்தரவாத திட்ட உச்சவரம்பு உயர்வால், குறு, சிறு நிறுவனங்கள் துவங்குவது அதிகரிக்கும். மாவட்ட அரசு மருத்துவமனைகளில், புற்றுநோய் பராமரிப்பு மையம் அமைப்பதை வரவேற்கிறோம்.விவசாயிகள், பெண்கள், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏ.ஐ., தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; இது ஒரு சிறப்பான பட்ஜெட்.

நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும்

ரத்தினசாமி, தலைவர், திருப்பூர் பின்னல் துணி உற்பத்தியாளர்கள் சங்கம் (நிட்மா):முன்பு இருந்தது போல், சிறு, குறு தொழில்கள் என்றும் நடுத்தர தொழில்கள் என்றும் தனியே பிரிக்க வேண்டும். குறு, சிறு தொழில்களுக்கு நடுத்தர தொழிலையும் சேர்த்து சலுகை வழங்கப்பட்டுள்ளது. நடுத்தர நிறுவனங்கள் அதிகம் பயன்பெறும்; குறு, சிறு நிறுவனங்களுக்கு சலுகை கிடைக்காது. குறு, சிறு தொழில்களுக்கு பிரித்து, தனியே நிதி ஒதுக்கியிருக்கலாம்.குறு, சிறு நிறுவனங்களை காட்டிலும், நடுத்தர நிறுவனங்கள் அதிகம் பயன்பெறும்; சிறு தொழில்களுக்கு சிறப்பாக இருக்காது. வருமான வரி உச்சவரம்பு அதிகரித்ததை வரவேற்கலாம். தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் இருந்து, நாட்டுக்கு 55 சதவீத வருவாய் கிடைக்கிறது; ஆனால், பட்ஜெட்டில், 18 சதவீதத்துக்கும் குறைவாக திட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது.-மேலும் செய்தி உள்ளே


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை