லாரியை வலதுபுறம் முந்த முயன்றதால் பஸ் விபத்து
திருப்பூர்; 'திருப்பூர் அருகே நேர்ந்த சாலை விபத்தில் பஸ் சிக்கியதற்கு, வலதுபுறம் லாரியை பஸ் முந்த முயன்றதே விபத்துக்கு காரணம்,' என, ஆர்.டி.ஓ., விசாரணையில் தெரிய வந்துள்ளது.திருப்பூரில் இருந்து ஈரோட்டுக்கு, 80 பயணிகளுடன் சென்ற தனியார் பஸ், பல்லேகவுண்டம்பாளையம், சாம்ராஜ்பாளையம் பிரிவில் முன்னால் சென்ற லாரியை வலதுபுறம் முந்தியவுடன் நிலை தடுமாறி விபத்தில் சிக்கியது. பஸ் கவிழ்ந்ததால், கல்லுாரி மாணவர்கள் இருவர் பலியாகினர். இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பாக, வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் மற்றும் அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு நடத்தினார்.ஆர்.டி.ஓ., ஜெயதேவராஜ் கூறியதாவது:பஸ் விழுந்த இடத்துக்கு அருகே ரோட்டோரத்தில் ஆறரை அடி பள்ளம் உள்ளது. பஸ் வேகமாக வந்து லாரியை முந்தி, முன்னேறி சென்றிருந்தால், வேகமாக விழுந்திருக்கும். பலியும் அதிகரித்திருக்கும். பஸ் வேகம் குறைவு என்பதால், ரோட்டை விட்டு இறங்கி சாய்ந்துள்ளது; இதனால் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது; படுகாயம் அதிகரித்துள்ளது.வலது புறம் முந்த முயற்சி எடுத்தது தவறு; விபத்தை ஏற்படுத்திய டிரைவர் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.தொடர் விசாரணைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பஸ் டிரைவர்கள் பொறுப்புணர்ந்து பஸ்களை இயக்கவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும். கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.