சம்பா பருவத்தில் பயிர்க்காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு
உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல், மக்காச்சோளம், சோளம் மற்றும் கொண்டக்கடலை ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம், என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்கள், இயற்கை இடர் பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஈடு செய்யும் வகையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், நடப்பாண்டில் சம்பா பருவத்தில் நெல், மக்காச்சோளம், சோளம் மற்றும் கொண்டக்கடலை ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம். கடன் பெறும் விவசாயிகள், தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக பதிவு செய்யலாம். பயிர்க்கடன் பெறாத விவசாயிகள், நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கல் சான்றை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று, அதனுடன் சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை நகலை இணைத்து பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். காப்பீடு கட்டணமாக, ஒரு ஏக்கருக்கு நெற்பயிருக்கு, ரூ.578, மக்காச்சோளத்திற்கு, ரூ.545, சோளத்திற்கு, ரூ.55, கொண்டக்கடலைக்கு, ரூ.254 செலுத்த வேண்டும். நெற்பயிருக்கு வரும், நவ.,15ம் தேதிக்குள் செலுத்த காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்காச்சோளம்-மற்றும் கொண்டக்கடலை பயிர்களை, நவ.,30க்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். சோளம் பயிரை, டிச.,16ம் தேதிக்குள் காப்பீடு செய்து பயன்பெறலாம். மேலும், விவசாயிகள் கூடுதல் விபரங்கள் பெற, மடத்துக்குளம் வேளாண் உதவி இயக்குவர் வசந்தா 70101 57948; குடிமங்கலம் கார்த்திகா, 75982 13534; உடுமலை தேவி, 99445 57552 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரவடிவேலு தெரிவித்தார்.