உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இ.எல்.ஐ., திட்டத்தில் ஊக்கத்தொகை பெறலாம்; பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு

இ.எல்.ஐ., திட்டத்தில் ஊக்கத்தொகை பெறலாம்; பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு

திருப்பூர்; 'மத்திய அரசின், இ.எல்.ஐ., திட்டத்தின் மூலமாக, திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் மற்றும் தொழிலாளர்கள், வேலை வாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை பெற்று பயன்பெறலாம்,' என, பி.எப்., திருப்பூர் மண்டல கமிஷனர் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து, வருங்கால வைப்பு நிதி நிறுவன திருப்பூர் மண்டல கமிஷனர் (நிலை - 1) அபிஷேக் ரஞ்சன் கூறியதாவது:முதன்முதலாக, தொழி லாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பதிவு சய்யும் தொழிலாளர்களுக்கு, மாத சம்பளம், ஒரு லட்சம் ரூபாய் வரையுள்ள, அனைத்து புதிய தொழிலாளர்களுக்கும், ஊக்கத்தொகை வழங்கப்படும்.தொடர்ச்சியாக ஆறு மாதம் பணியாற்றிய பிறகு முதல்கட்ட தொகையும், 12 மாதங்களுக்கு பிறகு இரண்டாம் கட்ட தொகை என, 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை விடுவிக்கப்படும்.தொழில் நடத்தும் உரிமையாளர்களுக்கும், ஒவ்வொரு புதிய தொழிலாளரை நியமித்தால், மாதம், 3000 ரூபாய் வரை, இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகைவழங்கப்படும்; உற்பத்தி துறையாக இருந்தால், கூடுதலாக இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை பெறலாம்.ஆதார் இணைக்கப்பட்ட இ.பி.எப்.ஓ., கணக்குகள், தொழிலாளர்களுக்கான ஊக்கத்தொகையை நேரடியாக வழங்கும். 'பான்' கார்டு இணைக்கப்பட்ட நிறுவன கணக்குகள் மூலமாக, தொழில் நடத்துவோருக்கான ஊக்கத்தொகை விடுவிக்கப்படும். இத்திட்டத்தின் வாயிலாக, திருப்பூர் பின்னலாடை தொழில் விரிவாக்கவும் செய்யவும், புதிய தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறவும் பயனுள்ள திட்டமாக இருக்கும்.வரும் இரண்டு ஆண்டுகளில், இளைஞர்கள் அதிக வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இ.எல்.ஐ., திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களையும், வழிகாட்டுதலையும் பெற, திருப்பூர் மண்டல பி.எப்., கமிஷனர் அலுவலகத்தில், உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது; தொழிலாளர்களும், தொழில்துறையினரும், உதவி மையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !