32 வீதிகளுடன் குடியிருப்பு தெரு என்று சொல்லலாமா?
பல்லடம்; மொத்தம் 32 வீதிகள், 130க்கும் அதிகமான குடியிருப்புகளுடன் கூடிய பகுதியை தெருவென்று ஊராட்சி ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பல்லடம் ஒன்றியம், சித்தம்பலம் ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்.ஏ.பி., சேரன் மாநகர் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குக்கிராமமாக உள்ள இப்பகுதி, தெரு என மாற்றப்பட்டுள்ளதாக, இங்குள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இப்பகுதியினர் கலெக்டரிடம் அளித்த மனு: சித்தம்பலம், எஸ்.ஏ.பி., சேரன் மாநகரில், 500க்கும் மேற்பட்ட சைட்டுகள் உள்ளன. இங்குள்ள, 32 வீதிகளில், 130க்கும் அதிகமான குடியிருப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களும் உள்ளன. கம்பெனி வாகனங்கள், பள்ளி, கல்லுாரி வேன்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் அதிக அளவில் இவ்வழியாக வந்து செல்கின்றன.ஐநுாறுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இப்பகுதியில், முறையான ரோடு வசதி கிடையாது. வீட்டு மனை ஆரம்பிக்கும்போது போடப்பட்ட தரமற்ற தார் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து, கற்கள், ரோடு முழுவதும் சிதறி கிடக்கின்றன. மழைநீர் குளம் போல் தேங்குவதால், தெருக்கள் சேறும் சகதியுமாக மாறுகின்றன. தினசரி காலை நேரம், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். முறையான ரோடு வசதி கேட்டு, கிராமசபை கூட்டங்களில் பலமுறை மனு அளித்தும் பயனில்லை. குக்கிராமமாக உள்ள இப்பகுதி, கணபதி நகருக்கு கீழ் உள்ள தெரு என, ஊராட்சி ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், எங்கள் பகுதிக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை வசதிகள் தடைபடும் வாய்ப்பு உள்ளது. எனவே, எஸ்.ஏ.பி., சேரன் மாநகரை, குக்கிராமமாக மாற்றி, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.